scorecardresearch

திருச்சி மாநாடு: ஓ.பி.எஸ் திட்டம் பலிக்குமா? கட்சி பெயர், கொடி பயன்படுத்த எதிர்ப்பு

ஓ.பன்னீர்செல்வம், வரும் ஏப்ரல் 24ஆம் தேதி திருச்சியில் பிரமாண்ட மாநாட்டை நடத்துவதற்கான ஏற்பாடுகளைச் செய்து வரும் நிலையில், தேர்தல் ஆணையம் அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமியை அங்கீகரித்துள்ளதாலும், ஓபிஎஸ் தரப்பினர் அதிமுக கொடி, சின்னத்தை பயன்படுத்தக்கூடாது என எடப்பாடி தரப்பினர் எச்சரிக்கை விடுத்துள்ளதும் ஓபிஎஸ்க்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டது.

ஓபிஎஸ் கூட்டம்

ஓ.பன்னீர்செல்வம், வரும் ஏப்ரல் 24ஆம் தேதி திருச்சியில் பிரமாண்ட மாநாட்டை நடத்துவதற்கான ஏற்பாடுகளைச் செய்து வரும் நிலையில், தேர்தல் ஆணையம் அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமியை அங்கீகரித்துள்ளதாலும்,  ஓபிஎஸ் தரப்பினர் அதிமுக கொடி, சின்னத்தை பயன்படுத்தக்கூடாது என எடப்பாடி தரப்பினர் எச்சரிக்கை விடுத்துள்ளதும் ஓபிஎஸ்க்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டது.

அதிமுக ஒற்றைத் தலைமை விவகாரத்தில், எடப்பாடி பழனிசாமியால், ஓ.பன்னீர்செல்வம் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். தனது ஆதரவாளர்களுடன் இணைந்து மீண்டும் அதிமுகவை கைப்பற்றும் முனைப்பில் ஓபிஎஸ் செயல்பட்டு வருகிறார்.

இந்நிலையில், தன்னுடைய பலத்தை நிரூபிப்பேன் என்று கூறி திருச்சியில் வருகிற 24ஆம் தேதி அதிமுக முப்பெரும் விழா மாநாடு நடத்தப்படும் என ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார்.மேலும் கடந்த 10ஆம் தேதி திருச்சியில் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, திருச்சி பொன்மலையில் உள்ள ஜி கார்னர் ரயில்வே மைதானத்தில் மாநாடு நடத்துவதற்கான பணிகளை தற்போது ஓபிஎஸ் அணியினர் மேற்கொண்டு வருகின்றனர். இதற்கான கால்கோள் நடும் விழா  நடைபெற்றது.இதில் வெல்லமண்டி நடராஜன், குப கிருஷ்ணன் உள்ளிட்ட ஓபிஎஸ் அணி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

திருச்சியில் வரும் 24ம் தேதி ஓபிஎஸ் தலைமையில் நடைபெறவிருக்கும் மாநாட்டிற்கு லட்சக்கணக்கான அதிமுக தொண்டர்கள் வருவார்கள். திருச்சியில் நடைபெறும் மாநாட்டிற்கு பிறகு எடப்பாடி தரப்பினர் சிதறி சின்னாபின்னம் ஆகி விடுவார்கள். திருச்சி மாநாடு ஓ.பன்னீர்செல்வத்திற்கு திருப்புமுனையாக அமையும் என்று ஓபிஎஸ் ஆதரவாளர்கள் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் தான் ஓபிஎஸ்ஸுக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமியை இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது. இந்த அங்கீகாரத்தால் இரட்டை இலை சின்னம் எடப்பாடி பழனிசாமிக்கு கிடைத்துள்ளது. இதனால், ஓபிஎஸ் தரப்புக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

மேலும், ஓபிஎஸ் தனது அரசியல் நகர்வில் புதிய அத்தியாயம் எனக் கருதும் திருச்சி மாநாட்டுக்கும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி என தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளதால், ஓபிஎஸ் தரப்பினர் அதிமுக பெயர், கொடி, சின்னம் ஆகியவற்றைப் பயன்படுத்தக் கூடாது என எடப்பாடி பழனிசாமி தரப்பினர் கருத்து தெரிவித்து வருகின்றனர். மீறினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளனர்.

அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டதன் மூலம், ஓபிஎஸ் நீக்கம் செல்லும். அதிமுக கட்சிக் கொடியை இனி வேறு யாராவது பயன்படுத்தினால் வழக்கு தொடரப்படும் என ஈபிஎஸ் ஆதரவாளரான பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ தெரிவித்துள்ளார்.

மேலும், “திருச்சியில் வரும் 24ஆம் தேதி நடைபெறும் ஓபிஎஸ் அணியினரின் மாநாட்டில் அதிமுக பெயர், கொடி, சின்னத்தை ஓபிஎஸ் பயன்படுத்தக் கூடாது. மீறி பயன்படுத்தினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்” என அதிமுக வழக்கறிஞர் இன்பதுரை எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதனால், ஓபிஎஸ் தரப்பு திருச்சியில் மாநாடு நடத்துவதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி என தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளதால், அவருக்கு எதிர் தரப்பான ஓபிஎஸ், அதிமுகவின் கட்சிக் கொடி, பெயர், சின்னம் ஆகியவற்றை பயன்படுத்த தடை கோரி ஈபிஎஸ் அணியினர் கோர்ட்டை நாடக்கூடும் என்பதால், திட்டமிட்டபடி திருச்சி மாநாடு நடக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

அதே நேரம் திருச்சியில் ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த கு.ப கிருஷ்ணன் திருச்சி மாநாட்டுக்கு பந்தக்கால் நாடுவது தொடர்பாக ஒரு சில குறிப்பிட்ட செய்தியாளர்களை மட்டும் அழைத்து தகவல் தெரிவித்து பேட்டி கொடுத்து நிகழ்ச்சிகளை நடத்தினார். அனைத்து பத்திரிகையாளையும் அரவணைத்து செல்ல வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் சொல்லிக் கொண்டு வருகிற வேளையில், திருச்சியில் பெரும்பாலான பத்திரிகையாளர்களை கு.ப. கிருஷ்ணன் புறக்கணித்ததால், பெரும்பான்மையான செய்தியாளர்கள் ஓபிஎஸ் நிகழ்ச்சிகளை புறக்கணித்தனர்.

மேலும், இந்த மாநாட்டில் கு.ப.கிருஷ்ணன் தனித்துவமாக செயல்படுவதாகவும் ஒரு குற்றச்சாட்டு எழுந்துள்ளது.இந்த நிலையில், ஓபிஎஸ்க்கு  எதிர்பாராத விதமாக தேர்தல் ஆணையம் எடப்பாடியை அங்கீகரித்தது ஓபீஸ்க்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தி இருப்பதால் அவரது அணியினரை அதிர்ச்சியில் ஆழ்நதுள்ளனர்.

ஓபிஎஸ் ஆதரவாளரும் மூத்த அரசியல்வாதியுமான பண்ருட்டி ராமச்சந்திரன் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில்;தேர்தல் ஆணையம் தனியாக இந்த முடிவிற்கு வர வில்லை.கர்நாடக மாநிலத்தில் நடைபெறும் தேர்தலுக்கு இரட்டை இலை சின்னத்தை வழங்க வேண்டும் என்று தொடர்ந்த வழக்கில் நீதிமன்ற கொடுத்த தீர்ப்பை வைத்து தான் தற்போது தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஈரோடு கிழக்கு தேர்தல் போன்று தான் தற்காலிகமாக இதை அறிவித்துள்ளது.

மேலும், திருச்சி பொதுக் கூட்டத்தில் தினகரன் தனிக்கட்சி தொடங்கி விட்டதால் பங்கேற்க மாட்டார், சசிகலா அதிமுகவினர் எல்லோரையும் ஒன்றிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.நாங்கள் சசிகலாவிற்கு உறுதுணையாக இருப்போம்..திருச்சி மாநாட்டிற்கு சசிகலா வந்தால்   அவருக்கு தர்ம சங்கடம் ஏற்படலாம், சசிகலாவுக்கு நாங்கள் தர்ம சங்கத்தை ஏற்படுத்த மாட்டோம்” எனக் கூறினார்.மொத்தத்தில் ஓபிஎஸ் கூட்டும் திருச்சி பொதுக்கூட்டம் பல்வேறு நெருக்கடிகளை சந்தித்து இருக்கிறது எனலாம்.

செய்தி: க.சண்முகவடிவேல்

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Ops trichy meeting will his idea wins