அ.தி.மு.க. மீண்டும் ஒன்றிணைய வேண்டும் என்ற தொண்டர்களின் கருத்தை முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் வெளிப்படுத்தி உள்ளதாக அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அவரது மகன் ஜெயபிரதீப் ஆகியோர் இன்று (மார்ச் 16) தெரிவித்துள்ளனர்.
புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரனிடம், எடப்பாடி பழனிசாமி-செங்கோட்டையன் இடையே நடந்து வரும் மோதல் போக்கு குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த டிடிவி தினகரன், “அ.தி.மு.க. பலவீனமாகி வருவதால் அங்குள்ள 90 சதவிகித தொண்டர்களும் நிர்வாகிகளும் ஜெயலலிதாவின் நோக்கமான அ.தி.மு.க. ஒன்றிணைய வேண்டும் என்பதை விரும்புகிறார்கள். அதை நிறைவேற்றுவதற்கான முயற்சிகளை அங்குள்ள மூத்த நிர்வாகிகள் எடுக்கிறார்கள். அதனால் அங்குள்ள தொண்டர்களின் வெளிப்பாடு தான் செங்கோட்டையன் மூலம் வெளிப்பட்டுள்ளது” என்றார்.
ஜெயலலிதா நிதி ஒதுக்கிய அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தில் அவரது படமும் எம்.ஜி.ஆர். படமும் புறக்கப்பணிக்கப்பட்டதை அ.தி.மு.க தொண்டர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். விளம்பர பிரியர்போல அந்த நிகழ்ச்சியில் எடப்பாடி பழனிசாமியின் பதாகைகள் மட்டும் இருந்தது பார்க்கவே நகைச்சுவையாக இருந்தது என்றார் டிடிவி.
வாணியம்பாடியில் செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர் செல்வம், “தமிழகத்தில் மீண்டும் 2026-ல் அ.தி.மு.க. ஆட்சி மலர வேண்டும் என்றால், பிரிந்து கிடக்கின்ற சக்திகள் ஒன்றிணைய வேண்டும் என்பது தான் தமிழக மக்களின் எண்ணமாகவும், அ.தி.மு.க. தொண்டர்களின் எண்ணமாகவும் உள்ளது. அதனால் ஈகோவை உதறி தள்ளிவிட்டு கட்சி நலன் கருதி ஒன்றிணைய வேண்டும்” என்று தெரிவித்தார்.
செங்கோட்டையனுக்கு ஓபிஎஸ் மகன் ஜெயபிரதீப் ஆதரவு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள பதிவில், “கொங்கு நாட்டு தங்கம். எனது அரசியல் குருமார்களின் ஒருவர். அ.தி.மு.க.-வின் உண்மை தொண்டன். அண்ணன் செங்கோட்டையன் அவர்கள் மனசாட்சியின் உணர்வுகள் வெளிப்பட தொடங்கியுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.