அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அதிமுக உட்கட்சித் தேர்தல் விதி நிபந்தனைகளின்படி பார்த்தால், அவர் தொடர்ந்து 5 ஆண்டுகள் அதிமுக உறுப்பினராக இல்லாததால் அவர் பதவிக்கு தகுதி இல்லாதவர் என்று அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்ட முன்னாள் எம்.பி எம்பி கே.சி. பழனிசாமி பரபரப்பு தகவல் தெரிவித்துள்ளார்.
“அதிமுக உட்கட்சி தேர்தல் நடத்தப்படுவது வெறும் கண்துடைப்புதான். அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அதிகாரத்திற்கு எதிராக சட்டரீதியாகவும், அரசியல் ரீதியாகவும், முறையாக உள்கட்சி தேர்தல் நடத்த வேண்டும் என்பதற்காகவும் என்னுடைய போராட்டத்தைத் தொடருவேன்” என்று முன்னாள் எம்.பி கே.சி. பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இது குறித்து கே.சி.பழனிசாமி கூறுகையில், “அதிமுக ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு போட்டியிடுபவரை 15 பேர் முன்மொழிய வேண்டும், 15 வழிமொழிய வேண்டும், கட்சியில் ஐந்தாண்டுகள் தொடர்ந்து உறுப்பினராக இருக்க வேண்டும் என்பன போன்ற உள்கட்சித் தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்வதற்கு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.
71 வயதான ஓமபோடி பிரசாத் சிங் என்ற அதிமுக உறுப்பினர் வெள்ளிக்கிழமை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு போட்டியிட வேட்புமனு கேட்டபோது அதிமுக தலைமை அலுவலகத்தில் தாக்கப்பட்டார்.
அதிமுக உட்கட்சி தேர்தல் நடத்தும் அதிகாரிகளின் கருத்துப்படி, மற்றவர்களும் வேட்புமனு தாக்கல் செய்ய வந்திருந்தனர். ஆனால், அவர்கள் கட்டாயமாக 15 முன்மொழிபவர்கள், 15 வழிமொழிபவர்கள், தொடர்ந்து ஐந்து ஆண்டுகள் கட்சியில் உறுப்பினராக இல்லாததால் அவர்கள் தகுதி பெறவில்லை என்று தெரிவித்தனர்.
“2017ம் ஆண்டு பிப்ரவரியில் கட்சியில் இருந்து பன்னீர்செல்வம் நீக்கப்பட்டார். எனவே, அவர் தொடர்ந்து 5 ஆண்டுகள் கட்சி உறுப்பினராக இல்லை என்பதால் அவர் கட்சி விதிப்படி தகுதியில்லாதவர்” என்று முன்னாள் எம்.பி கே.சி.பழனிசாமி கூறினார்.
டிசம்பர் 1-ம் தேதி, அதிமுகவின் செயற்குழு கூட்டத்தில் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவியை முதன்மை உறுப்பினர்களால் ஒற்றை வாக்கு வித்தியாசத்தில் தேர்ந்தெடுக்கும் கட்சியின் தேர்தல் விதியை திருத்த முடிவு செய்யப்பட்டது.
ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோரின் தேர்தல் நடைமுறைகள் தொடர்பான விதிகளை தளர்த்துவதற்கும் பொதுக்குழுவின் அதிகாரங்களை நீக்குவதற்கும் செயற்குழு தீர்மானித்தது.
அதிமுக உள்கட்சி தேர்தல் விதியானது செப்டம்பர் 12, 2017 அன்று நடைபெற்ற கட்சியின் பொதுக்குழுக் கூட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டது. இதன் மூலம் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் சபையால் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று முடிவு செய்யப்பட்டது.
கே.சி.பழனிசாமி கருத்துப்படி, முதலில் கட்சியில் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் என்ற கருத்தே இல்லை. பொதுச்செயலாளர் முதன்மை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்று கட்சி விதி கூறுகிறது.
“தேர்தல் நடைமுறையில் திருத்தம் கொண்டு வரப்பட்டால் மட்டுமே இரண்டு தலைவர்களுக்கு இடையே நிலவும் அதிகாரப் போட்டி முடிவுக்கு வரும்” என்று கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் ஐ.ஏ.என்.எஸ் செய்தி நிறுனத்திடம் கூறியுள்ளார்.
தேர்தல் தோல்விகள், அதிமுகவுக்குள் அதிகரித்து வரும் கருத்து வேறுபாடு, ஊழல் வழக்குகள், முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் நடைபெறும் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனைகள் போன்ற கலவையான காரணங்கள் அதிமுக தலைமையை கட்சி விதிகளில் திருத்தம் செய்ய வழிவகுத்துள்ளது.
அதிமுகவின் பொதுச் செயலாளரைத் தேர்ந்தெடுக்கும் முதன்மை உறுப்பினர்களின் உரிமையைப் பறித்து, அந்த உரிமையைப் பொதுக்குழுவுக்கு வழங்கியதற்கு எதிராக, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சி. பழனிசாமியால் டெல்லி உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு நிலுவையில் உள்ளது.
மக்களவைத் தேர்தல், சட்டமன்றத் தேர்தல் மற்றும் உள்ளாட்சி தேர்தல்களில் தொடர்ச்சியான தேர்தல் தோல்விகளுக்குப் பிறகு, அதிமுக தலைமை எடுத்த முடிவுகள் குறித்து கட்சித் தொண்டர்களும் இரண்டாம் நிலைத் தலைவர்களும் கேள்வி எழுப்பத் தொடங்கியுள்ளனர்.
இருப்பினும், டிசம்பர் 2ம் தேதி, ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கான தேர்தல் அட்டவணையை கட்சி அறிவித்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
டிசம்பர் 7-ம் தேதியை அதிமுக உள்கட்சித் தேர்தல் தேதியாகவும், மறுநாள் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் கட்சி அறிவித்துள்ளது. வேட்புமனு தாக்கல் டிசம்பர் 3ம் தேதி தொடங்கி டிசம்பர் 4ம் தேதி முடிவடையும் என்று கட்சி தெரிவித்துள்ளது.
அதிமுக சட்ட விதிகளின்படி, ஐந்தாண்டுக்கு ஒரு முறை, அமைப்பு தேர்தல் நடத்த வேண்டும். தற்போது அதிமுக ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வமும் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் உள்ளனர்.
அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்ட முன்னாள் எம்.பி கே.சி. பழனிசாமி அதிமுக உள்கட்சி தேர்தலுக்கு தடை விதிக்க கோரி தாக்கல் செய்த மனுவை டிசம்பர் 3ம் தேதி விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் தடை விதிக்க மறுத்துவிட்டது.
அதிமுக உள்கட்சித் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகும் வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கால அவகாசத்தை கட்சி தரவில்லை என்று கே.சி. பழனிசாமி வாதிட்டார்.
“தேர்தலில் முறைகேடு கண்டறியப்பட்டால் தேர்தலை ரத்து செய்வதாக கூறிய நீதிமன்றம், ஓ. பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி, அதிமுக உள்கட்சி தேர்தல் அதிகாரிகள் சி.பொன்னையன், பொள்ளாச்சி வி.ஜெயராமன் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது” என்று கே.சி.பழனிசாமி கூறினார்.
டிசம்பர் 2, 2021 முதல் தேர்தல் அறிவித்த பிறகு 21 நாட்கள் கட்டாய கால அவகாசத்தை அதிமுக அளிக்கவில்லை என்று கே.சி. பழனிசாமி தனது மனுவில் கூறியுள்ளார்.
அதிமுக உள்கட்சித் தேர்தலை நடத்துவதற்கு ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவரை தேர்தல் அதிகாரியாக நியமிக்குமாறும் அவர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கோரியிருந்தார்.
அதிமுகவின் பல்வேறு பதவிகளுக்கான அமைப்புத் தேர்தல்கள் டிசம்பர் 13-ம் தேதி தொடங்கி டிசம்பர் 23-ம் தேதி வரை இரண்டு கட்டங்களாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
கட்சித் தேர்தலை நடத்துவதற்கு ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவரை சுயாதீன தேர்தல் அதிகாரியாக நியமிக்குமாறும் அவர் நீதிமன்றத்தில் மனு செய்திருந்தார்.
அ.தி.மு.க.வின் பல்வேறு பதவிகளுக்கான அமைப்புத் தேர்தல்கள் டிசம்பர் 13-ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 23-ஆம் தேதி வரை இரண்டு கட்டங்களாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
இதனிடையே, அதிமுக உள்கட்சித் தேர்தலில் ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு ஓ.பன்னீர்செல்வத்தையும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு எடப்பாடி பழனிசாமியையும் முன்மொழிந்து 154 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். அதிமுகவில் நாளை மறுநாள் (டிசம்பர் 7) தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ஓபிஎஸ், ஈபிஎஸ் போட்டியின்றி தேர்வாக உள்ளனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.