மிக கனமழை காரண்மாக நான்கு மாவட்டங்களுக்கு இன்றைய தினம் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. தென்தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. மேலும், தெற்கு அந்தமான் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் நாளை (நவ 21) ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகக்கூடும் என கருதப்படுகிறது.
இதனால் வரும் 23-ஆம் தேதி தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. இது மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து, அதற்கடுத்த இரண்டு நாள்களில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறக்கூடும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், நான்கு மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் திருவாரூர், நாகை, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் மயிலாடுதுறை, தஞ்சை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, விருதுநகர் மற்றும் தென்காசி ஆகிய எட்டு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“