தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் நேற்று (மே 22) குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது. இந்த தாழ்வுப் பகுதி வடகிழக்கு திசையில் நகர்ந்து நாளை 24-ம் தேதி தாழ்வு மண்டலாமாக மாறக் கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தாழ்வு மண்டலம் புயலாக மாறினாலும் தமிழகத்தை தாக்காது எனக் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், தாழ்வுப் பகுதியானது வடக்கு நோக்கி நகர்வதால் ஆந்திர பகுதிகளில் மழை தொடங்கி அது மெல்ல மெல்ல வட தமிழக கரையோரப் பகுதிகளில் மழையை கொடுக்கும் என்றும், அதே நேரம் அரபிக் கடலில் ஏற்பட்டுள்ள காற்று சூழற்சி காரணமாக கேரளா மற்றும் தமிழகத்தின் தென்மாவட்டங்களில் மழை பெய்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதான் 25-ம் தேதி வரை இருக்க கூடிய நிலவரம் ஆகும். அதன் பின் மழை குறைந்து மீண்டும் வெயில் அதிகரிப்பதற்கான வாய்ப்பு உள்ளது எனவும் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தெற்கு கேரளா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, இன்று (மே 23) தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி ஆகிய 5 மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும். அதானல் இப்பகுதிகளுக்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
இதே போன்று, இன்று ராமநாதபுரம், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருப்பூர், கோவை, நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் கணித்துள்ளது.
அதே நேரம் ஆந்திராவில் நிலவும் காற்று சூழற்சி காரணமாக அங்கிருந்து நகர்ந்து மதியம் 3 மணியளவில் சென்னை, காஞ்சிபுரம், மதுராந்தகம் மற்றும் கடலோரப் பகுதிகளாக உள்ள புதுச்சேரி, நாகப்பட்டினம், மயிலாடுதுறை பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. பெரம்பலூரில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“