தமிழ்நாடு முழுவதும் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. நேற்று சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கன்னியாகுமரி, ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்தது. இந்நிலையில் வங்கக் கடலில் தீவிர காற்றழுத்த தாழ்வுப் பகுதி நிலவி வருகிறது. புயலாக வலுப்பெறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அந்தவகையில் தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் கடந்த 2 தினங்களாக நிலவி வந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி, தொடர்ந்து வலுப்பெற்று தீவிர காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக அதே பகுதியில் நிலவி வருகிறது. இது மேற்கு- வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று (வியாழக் கிழமை) காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதன் பின்னர் வடமேற்கு திசையில் நகர்ந்து தென் மேற்கு வங்கக் கடல் பகுதியில் புயலாக வலுப்பெறக் கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாகவும், இலங்கையை ஒட்டியுள்ள பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாகவும் அடுத்து வரும் 4 நாட்களுக்கு (இன்று முதல் 3-ம் தேதி வரை) தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் அனேக இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
இன்று மழை
மேலும், இன்று (நவ.30) செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப் பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களிலும் கனமழை பெய்யக்கூடும்.
காற்றழுத்த தாழ்வு மண்டலம் தொடர்ந்து தென் மேற்கு வங்கக் கடல் பகுதியில் நீடிக்கும் என்பதால், நாளை மறுநாள் (02-12-2023), அதற்கு அடுத்த நாள் (03-12-2023) சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. இதனால் இந்த பகுதிகளுக்கு நிர்வாக ரீதியாக 'ஆரஞ்சு' எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“