சென்னையில் அசோக் நகர் அரசுப் பள்ளியில் ஆன்மீகப் பேச்சாளர் ஒருவர் பேசிய கருத்துகள், பிற்போக்குத் தனமானவை என சர்ச்சையான நிலையில், அந்த பள்ளியின் தலைமை ஆசிரியை பணியிட மாற்றம் செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், இது குறித்து விசாரிக்க பள்ளிக் கல்வி இயக்குநர் தலைமையில் விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
சென்னையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு, அசோக் நகர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில், ஆன்மீக பேச்சாளர் மகாவிஷ்ணு தன்னம்பிக்கை உரை என்ற பெயரில் பேசிய கருத்துகளும் அப்போது அப்பள்ளியின் ஆசிரியர் ஒருவருடன் அந்தப் பேச்சாளர் மேடையில் இருந்தபடியே வாக்குவாதத்தில் ஈடுபட்டதும் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையானது.
இதைத் தொடர்ந்து, அப்பள்ளியின் முன்னாள் மாணவர் சங்கத்தினர் திரண்டு அப்பள்ளியின் முன்னாள் வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 6) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில், சம்பந்தப்பட்ட பள்ளியின் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள வருகை தந்த பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது: “பள்ளி நிகழ்ச்சியில் சர்ச்சைக்குரிய விதத்தில் பேசிய விவகாரத்தில் சம்பந்தப்பட்ட அனைவரின் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். யாராக இருந்தாலும் நடவடிக்கை உறுதி. அனைத்து பள்ளிகளுக்கும் பாடமாக இருக்கும் வகையில் அந்த நடவடிக்கை அமையும். என் ஏரியாவுக்கு வந்து, என் ஆசிரியரை அவமானப்படுத்திவிட்டுப் போயிருக்கிறார். நான் சும்மா விடமாட்டேன்” என்று கூறினார்.
இதைத்தொடர்ந்து, பள்ளியின் நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் அன்பில் மகேஸ், “பள்ளி மாணவர்கள் சுயமாக சிந்தித்து செயல்பட வேண்டும். உணர்ச்சிப் பெருக்கில் சிக்கிவிடக் கூடாது. அறிவை செலுத்தி சிந்திக்க வேண்டும். கல்வியில் சிறந்து விளங்க வேண்டும். மாணவர்கள் ஏன், எதற்கு என்று கேள்வி கேட்க வேண்டும். மதிப்பெண் மட்டுமே புத்திசாலித்தனம் அல்ல; நல்லது, கெட்டது எது என அறிந்து கொள்ளும் பகுத்தறிவு வேண்டும். ” என்று அறிவுரை கூறினார்.
இதனிடையே, சென்னை அசோக் நகர் பள்ளியில் சர்ச்சைக்குரிய சொற்பொழிவை ஏற்பாடு செய்தது குறித்தும் அந்த சொற்பொழிவு குறித்தும் விசாரணை நடத்த பள்ளிக் கல்வி இயக்குனர் தலைமையில் விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. மேலும், அந்த பள்ளியின் மாற்றுத் திறனாளி ஆசிரியர் பேச்சாளரால் அவமதிக்கப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையடுத்து, சென்னை அசோக் நகர் பள்ளியில் சர்ச்சைக்குரிய சொற்பொழிவை ஏற்பாடு செய்த அப்பள்ளியின் தலைமை ஆசிரியை தமிழரசி பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். திருவள்ளூர் கோவில்பதாகை அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியையாக நியமனம் செய்து பள்ளிக்கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். பிற்போக்குத்தன பேச்சாளர் மகாவிஷ்ணுவை மாணவிகள் மத்தியில் பேச வைத்ததற்காக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“