மதுரை அருகே வரிச்சியூர் கிராமத்தை சேர்ந்தவர் செல்வம். இவர் மீது கொலை, ஆள்கடத்தல், கொலை முயற்சி உள்ளிட்ட பல வழக்குகள் உள்ளன. பெரிய பெரிய தங்கச் சங்கிலிகளையும், நகைகளையும் அணிந்து ஒரு நடமாடும் நகைக்கடையாகவே நடமாடி வருகிறார்.
இந்நிலையில், கோவையில் பயங்கர ஆயுதங்களுடன் வரிச்சூர் செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபடுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் கோவை மாநகரம் முழுவதும் போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு, அவரைத் தேடினர்.இருப்பினும் எந்த துப்பும் கிடைக்கவில்லை. இதனைத் தொடர்ந்து கோவை மாநகர் காவல்துறை ஆணையர் சரவண சுந்தர், வரிச்சூர் செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் யாரேனும் கண்ணில் பட்டால் அவர்களை கைது செய்ய வேண்டும் என்றும், ஏதேனும் அசம்பாவிதம் நேர்ந்தால் வரிச்சூர் செல்வத்தை காலில் சுட்டு பிடிக்க காவல் துறையினருக்கு உத்தரவிட்டார்.
இதனையடுத்து, மதுரை கருப்பாயூரணியில் உள்ள தனது இல்லத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த வரிச்சூர் செல்வம், “நான் எந்தப் பிரச்சினைக்கும் போகவில்லை. கோவைக்குச் சென்று 13 வருடங்கள் ஆகிவிட்டது. எனக்கு கோவையில் செல்லையா என்பவரைத் தவிர வேறு யாரையும் தெரியாது. தப்பான எதையும் செய்யவில்லை. போலீஸ் சுடுவார்கள் என்பது உண்மைதான். எனக்கு எதிரியாகவே யாரும் கிடையாது. காவல் ஆணையரின் உத்தரவு எனக்கு அதிர்ச்சியளிக்கிறது என்று தெரிவித்துள்ளார். இந்தத் தகவல்கள் கோவையைத் தொடர்ந்து, மதுரையிலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.