பொங்கல் பண்டிகையை சொந்த ஊர்களில் கொண்டாட சென்னையில் இருந்து கடந்த 2 நாட்களில் சுமார் 8.5 லட்சம் பேர் பேருந்து, ரயில்கள் மூலம் சென்றுள்ளனர்.
தமிழ்நாடு முழுவதும் தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை நாளை (ஜன.15) சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. பொங்கல் திருநாளையொட்டி தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இன்று (ஜன.14) போகி பண்டிகை தொடங்கி ஜன.17 காணும் பொங்கல் வரை தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. சில பள்ளி, கல்லூரி, அலுவலகங்களில் ஜன.13 சனிக்கிழமை முதல் 5 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டன.
தொடர் விடுமுறை காரணமாக பொங்கல் பண்டிகையை தங்கள் சொந்த ஊர்களில் கொண்டாட சென்னையில் இருந்து பலரும் சென்றுள்ளனர். நேற்று (சனிக்கிழமை) வரை சுமார் 8.5 லட்சம் பேர் பேருந்து, ரயில்கள் மூலம் சென்றுள்ளனர்.
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் கடந்த 12-ம் தேதி முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. சென்னையில் இருந்து நேற்று முன்தினம் 2,100 பேருந்துகள், 1,260 சிறப்பு பேருந்துகள் என மொத்தம் 3,360 பேருந்துகள் இயக்கப்பட்டன.
இவற்றில் மொத்தம் 1.95 லட்சம் பேர் பயணித்தனர். நேற்று 1,071 வழக்கமான பேருந்துகள், 658 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு, 85,000 மேற்பட்டோர் பயணம் செய்தனர்.
ஆம்னி பேருந்துகளில் முன்பதிவு செய்த 50,000 பேர் சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர். இவ்வாறு கடந்த 2 நாட்களில் சென்னையில் இருந்து அரசு பேருந்துகளில் 4 லட்சம் பேர், ஆம்னி பேருந்துகளில் 1 லட்சம் பேர் என 5 லட்சம் பேர் சொந்த ஊர் சென்றுள்ளனர்.
இவ்வாறு போக்குவரத்துக் கழகப் பேருந்துகள், ஆம்னி பேருந்துகள் மற்றும் ரயில்கள் மூலம் ஏறக்குறைய 8.5 லட்சம் பேர் சென்னையில் இருந்து சென்றுள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“