P.Chidambam tweet about Sanskrit oath controversy on Madurai Medical college: சமஸ்கிருத உறுதி மொழி எடுத்துக் கொண்ட சர்ச்சையில், மதுரை அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில், அவருக்கு தெரியாமல் இந்தப் பிழை நடந்திருந்தால் அவரைப் பொறுப்பாக்கக் கூடாது என முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் ட்வீட் செய்துள்ளார்.
மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில், முதலாம் ஆண்டு மாணவர்கள் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சியில், சமஸ்கிருத உறுதிமொழியை மொழிமாற்றம் செய்து உறுதிமொழி எடுத்ததாக சர்ச்சை எழுந்தது. இந்த விவகாரத்தில் மருத்துவக் கல்லூரி முதல்வர் ரெத்தினவேலு காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இந்தநிலையில் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம், டீனுக்கு தெரியாமல் இந்த பிழை நடந்திருந்தால், அதற்கு அவரை பொறுப்பாக்கக் கூடாது. நல்ல, மூத்த டாக்டரின் சேவையை மக்கள் இழந்துவிடக்கூடாது என கவலை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ”மதுரை மருத்துவக் கல்லூரியில் முதலாண்டு மாணவர்களுக்கான வரவேற்பு நிகழ்ச்சியில் தவறான உறுதிமொழியை மாணவர் தலைவர் வாசித்து, அதை மாணவர்கள் ஏற்ற நிகழ்ச்சி கண்டனத்திற்குரியது, வருத்தம் அளித்தது. மருத்துவக் கல்லூரி டீன் அவர்களுக்குத் தெரிவிக்காமல் மாணவர் தலைவர் இந்தத் தவறைச் செய்திருக்கிறார் என்று பல டாக்டர்கள் கூறியிருக்கிறார்கள்.
இதையும் படியுங்கள்: மதுரை மெடிக்கல் காலேஜில் சமஸ்கிருத உறுதிமொழி: நேரடியாக கண்டித்த அமைச்சர் பி.டி.ஆர்
டீன் டாக்டர் ரத்தனவேலு அவர்கள் கொரோனா காலத்தில் சிவகங்கை தலைமை மருத்துவ மனையில் மிகச் சிறப்பாகப் பணியாற்றினார் என்பதை நானும் சிவகங்கை மாவட்ட மக்களும் அறிவோம். அவருக்குத் தெரியாமல் இந்தப் பிழை நடந்திருந்தால் அவரைப் பொறுப்பாக்கக் கூடாது. ஒரு நல்ல, மூத்த டாக்டரின் சேவையை மக்கள் இழந்துவிடக்கூடாது என்பதே என் கவலை” என பதிவிட்டுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil