முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் வீட்டில் திருட்டு தொடர்பான வழக்கில் சம்பந்தப்பட்ட 46 வயது பெண் ஒருவர், காவல்துறையினர் விசாரித்த சில மணிநேரங்களில் தற்கொலை செய்துக் கொண்டார்.
தற்கொலை செய்துக் கொண்ட பார்வதி தி.நகரில் வசித்து வருவதாகவும், அவரது உடல் திங்கட்கிழமை அதிகாலையில் அவரது பக்கத்து வீட்டுக்காரர்களால் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. காவல்துறை விசாரணைக்குப் பிறகு, பார்வதி மிகுந்த மன உளைச்சலில் இருந்ததாகவும், அதனால் அவர் தற்கொலை செய்துக் கொண்டிருக்கலாம் எனவும் பார்வதியின் குடும்பத்தார் சந்தேகிக்கின்றனர். 2018-ஆம் ஆண்டு சென்னையில் உள்ள ப.சிதம்பரத்தின் வீட்டில் நடந்த திருட்டு சம்பவத்துக்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என பார்வதி தனது குடும்பத்தினரிடம் கூறியிருக்கிறார். தணிகாச்சலம் சாலையில் உள்ள ஒரு ஹோட்டலில் பணிபுரிந்து வந்த பார்வதி, தனது கணவருடன் பாண்டி பஜாரில் வசித்து வந்திருக்கிறார்.
கடந்தாண்டு ஜூலை 8, 2018-ல், சென்னை – நுங்கம்பாக்கம், கதர் நவாஸ் கான் சாலையில் உள்ள ப.சிதம்பரத்தின் வீட்டிலிருந்து சுமார் ரூ .1.5 லட்சம் பணம், ரூ. 1 லட்சம் மதிப்புள்ள நகைகள், மற்றும் சில பட்டு புடவைகள் காணாமல் போயின. வீடு திரும்பிய நளினி சிதம்பரம், அலமாரியைத் திறந்து பார்த்ததும், இதை கவனித்தார்.
சி.சி.டி.வி காட்சிகளை வைத்து உடனடியாக காவல்துறையில் புகார் கொடுக்கப்பட்டது. சிதம்பரம் வீட்டுப் பணியாளர்கள் இருவர் சந்தேகிக்கப்பட்டனர். முன்னாள் அமைச்சரும் அவரது குடும்பத்தினரும் வெளியூருக்கு சென்றிருந்த பத்து நாட்களில் இந்த கொள்ளை சம்பவம் நடந்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகித்தனர். அந்த பணியாளர்களின் குடும்பங்கள் பணத்தைத் திருப்பித் தர ஒப்புக்கொண்டதால், பின்னர் போலீஸ் புகார் திரும்பப் பெறப்பட்டது.
இருப்பினும், நகைகள் மற்றும் பணம் திரும்ப தரப்படவில்லை, பின்னர் அந்த இரண்டு பணியாளர்களையும் காவல்துறையினர் கைது செய்தனர். பாதுகாப்பிற்காக பார்வதியிடம் நகைகளை கொடுத்ததாக அதில் ஒருவர் கூறியதாக தெரிகிறது.
இந்த வழக்கில் பார்வதியையும் அவரது குடும்ப உறுப்பினர்களையும் காவல்துறையினர் சுமார் மூன்று மாதங்களாக விசாரித்தனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை, பார்வதி, அவரது மகள், மற்றும் மகனை விசாரிப்பதற்காக அழைத்து வந்து நள்ளிரவு 1.30 மணிக்கு தான் விடுவிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான பார்வதி, தற்கொலை செய்துக் கொண்டிருக்கலாம் என பார்வதியின் அண்டை வீட்டினர் கூறுகிறார்கள்.