ப.சிதம்பரம் உறவினர் சிவமூர்த்தி கொலை பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இவர் திருப்பூரை சேர்ந்தவர்! பெண் தொடர்பு விவகாரத்தில் இந்த கொலை நடந்திருக்கிறது.
முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் உறவினர் திருப்பூரை சேர்ந்த சிவமூர்த்தி. இவர் திருப்பூரை சேர்ந்தவர். அங்கு பனியன் கம்பெனி நடத்தி பார்த்தார். இவர் கோவைக்கு கடத்தி செல்லப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கிறார்.
சிவமூர்த்தி கொலை தொடர்பாக கோவை கணபதியை சேர்ந்த விமல், கவுதமன், மணிபாரதி ஆகிய 3 பேரை போலீஸார் கைது செய்தனர். இவர்கள் கூலிப்படையை சேர்ந்தவர்கள். இவர்களில் விமல், கொலை செய்யப்பட்ட சிவமூர்த்தியின் பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார்.
அவர்களிடம் விசாரித்த போது பெண் தொடர்பு விவகாரத்தில் இந்த கொலை நடந்தது தெரிய வந்தது. சிவமூர்த்தி பனியன் கம்பெனியில் திருப்பூரை சேர்ந்த மூர்த்தி என்பவரது மனைவி புவனேஸ்வரி வேலை பார்த்து வந்தார்.
அவருக்கும் சிவமூர்த்திக்கும் தொடர்பு ஏற்பட்டுள்ளது. மேலும் சிவமூர்த்திக்கு பல பெண்களுடனும் தொடர்பு இருந்துள்ளதாக கூறப்படுகிறது. பெண் சபலம் இருந்ததால் அவரிடம் இருந்து பணம் பறிக்க மூர்த்தி திட்டமிட்டுள்ளார். இதற்காக அவர் விமலை நாடி உள்ளார். அவரும் இத்திட்டத்திற்கு ஒத்துக்கொண்டார்.
சிவமூர்த்தியிடம் விமல் கோவையில் ஒரு வங்கியில் குறைந்த வட்டிக்கு கடன் வழங்குகிறார்கள். அங்கு சென்று கடன் வாங்கி தருகிறேன் என கூறி உள்ளார்.
இதனை நம்பி சிவமூர்த்தி தனது காரில் விமலை அழைத்து வந்துள்ளார். அவருடன் மூர்த்தியும் வந்துள்ளார். வழியில் தான் கவுதமன், மணிபாரதி ஆகியோர் ஏறி உள்ளனர்.
4 பேரும் சேர்ந்து சிவமூர்த்தியிடம் பணம் கேட்டு மிரட்டி இருக்கிறார்கள். அவர் கொடுக்க மறுக்கவே மேட்டுப்பாளையத்திற்கு அழைத்து சென்று அவரை அடித்து கொன்று காரில் உடலை எடுத்து சென்று ஓசூர் அருகே உள்ள ஏரியில் வீசி சென்றுள்ளனர்.
சிவமூர்த்தி மாயமானதாக உறவினர்கள் புகார் கொடுத்த உடன் போலீசார் அவரது செல்போன் எண்ணை ஆராய்ந்தனர். அவருக்கு வந்த அழைப்பு பட்டியலை சேகரித்தனர். அப்போது அவரது செல்போனுக்கு சிவமூர்த்தி பனியன் கம்பெனியில் வேலை பார்க்கும் புவனேஸ்வரி கணவர் மூர்த்தி அடிக்கடி பேசியது தெரிய வந்தது.
சிவமூர்த்தியும் அவரிடம் அடிக்கடி பேசி உள்ளார். இதனை வைத்து மூர்த்தி செல்போனை ஆய்வு செய்த போது அவர் காரமடை பகுதியில் இருப்பது தெரிய வந்தது. அங்கு சென்ற திருப்பூர் போலீசார் இன்று காலை மூர்த்தியை கைது செய்தனர்.
இதற்கிடையே ஓசூர் ஏரியில் வீசப்பட்ட சிவமூர்த்தி உடலை தேடும் பணியில் வேலூர் மற்றும் திருப்பூர் போலீசார் ஈடுபட்டுள்ளனர். இந்தக் கொலை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.