காங்கிரஸ் நட்சத்திர வேட்பாளர்கள் பட்டியலில் ப.சிதம்பரம் - திஹார் சிறையில் இருந்து எப்படி?
கே.எஸ்.அழகிரி, மேலிட பொறுப்பாளர் முகுல் வாஸ்னிக், செயல் தலைவர்கள், முன்னாள் தலைவர்கள், நடிகை குஷ்பு, எம்.பி.,க்கள் இடம் பெற்றுள்ளனர். அதேசமயம் திஹார் சிறையில் இருக்கும் முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் பெயரும் இடம் பெற்றுள்ளது
முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் ஆகஸ்ட் 23-ம் தேதி சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மொரிஷியஸ் நாட்டிலிருந்து ஐஎன்எஸ் மீடியா என்ற நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட அந்நிய நேரடி முதலீட்டுக்கான ஒப்பந்தத்தில் முறைகேடு செய்யப்பட்டதாக அமலாக்கத் துறை மற்றும் சிபிஐ அவர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
Advertisment
இந்நிலையில், இடைத் தேர்தலை முன்னிட்டு சிதம்பரத்தின் பெயர் பிரச்சாரத்திற்கான காங்கிரஸ் நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளது.
விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டசபை தொகுதிகளுக்கு வரும், 21ல் இடைத்தேர்தல் நடக்க உள்ளது. இரு தொகுதிகளிலும் அ.தி.மு.க போட்டியிடுகிறது. தி.மு.க., கூட்டணி சார்பில், விக்கிரவாண்டியில் தி.மு.க.,வும், நாங்குநேரியில் காங்கிரசும் போட்டியிடுகின்றன.
இரு தொகுதிகளிலும், தேர்தல் பிரச்சாரம் செய்ய உள்ள நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலை, செப்., 30க்குள் வழங்க வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் சார்பில் 40 பேர் பட்டியலும், அங்கீகாரமில்லாத கட்சிகள் சார்பில் 20 பேர் பட்டியலும் அளிக்கப்பட்டுள்ளன.
அ.தி.மு.க., நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலில், முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம், அமைச்சர்கள், எம்.பி.,க்கள், முன்னாள் அமைச்சர்கள் இடம் பெற்றுள்ளனர். அமைச்சர்களில் வளர்மதி, பாஸ்கரன் தவிர, மற்றவர்கள் இடம் பெற்றுள்ளனர். தி.மு.க., பட்டியலில், அக்கட்சித் தலைவர் ஸ்டாலின், பொருளாளர் துரைமுருகன், கனிமொழி, உதயநிதி, எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள் இடம் பெற்றுள்ளனர். அ.ம.மு.க.,விலிருந்து வந்த, செந்தில் பாலாஜி பெயர் இல்லை. ஆனால், தங்கதமிழ்செல்வன் பெயர் இடம் பெற்றுள்ளது.
தமிழக காங்கிரஸ் கட்சி வழங்கியுள்ள பட்டியலில், மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி, மேலிட பொறுப்பாளர் முகுல் வாஸ்னிக், செயல் தலைவர்கள், முன்னாள் தலைவர்கள், நடிகை குஷ்பு, எம்.பி.,க்கள் இடம் பெற்றுள்ளனர். அதேசமயம் திஹார் சிறையில் இருக்கும் முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் பெயரும் இடம் பெற்றுள்ளது.