Advertisment

தார்மிக தோல்வி மோடிக்குதான்... நாங்கள் வெற்றியைக் கொண்டாடினால் அவருக்கு வருத்தம் ஏன்? ப. சிதம்பரம் கேள்வி

இந்த தேர்தலில், தார்மிக வெற்றி என்பது காங்கிரஸ் கட்சிக்குத்தான். தார்மிக தோல்வி யாருக்காவது ஏற்பட்டிருக்கிறது என்றால், அது நரேந்திர மோடிக்குத்தான் என்று ப. சிதம்பரம் கூறியுள்ளார்.

author-image
WebDesk
New Update
p chidambaram on corona virus, indian economy, ப.சிதம்பரம்

ப. சிதம்பரம்

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

“தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் மக்களை முட்டாளாக்கியுள்ளது. கருத்துக் கணிப்பு என்ற பெயரில் கருத்து திணிப்பு நடத்தப்பட்டு, மக்கள் தவறாக வழிநடத்தப்பட்டனர். தேர்தல் முடிவுகள் அனைத்து கட்சியினருக்கும் படிப்பினைதான். சில மாநிலங்களில் காங்கிரஸுக்கு ஏற்பட்டுள்ள தோல்வி எங்களுக்கு படிப்பினையாக உள்ளது” என்று ப. சிதம்பரம் கூறியுள்ளார்.

Advertisment

சென்னை சத்யமூர்த்தி பவனில் காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரம் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறியது: “மக்களவைத் தேர்தலின் போது, தொலைக்காட்சிகளில் வெளியிடப்பட்ட தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் தயாரிக்கப்பட்டவை. நான் உள்பட பல தலைவர்களும் வாக்குப்பதிவு தினத்தன்று பல வாக்குச்சாவடிகளுக்குச் சென்றோம். ஆனால், எந்த வாக்குப்பதிவு மையத்தின் வெளியிலும், வாக்களித்து வெளியே வந்த வாக்காளர்களிடம் கருத்து கேட்டதாக எந்த செய்தியும் கிடையாது. ஆனால், திடீரென்று நாங்கள் பல லட்சம் பேரிடம் கருத்துத்துக் கணிப்பு கேட்டதாக கூறி, 350-400 இடங்களில் பா.ஜ.க வெற்றி பெறும் என்றனர்.

இறுதியில், எப்படி அனைத்து தொலைகாட்சிகளும் அந்த 350 என்ற எண்ணுக்கு வர முடிந்தது. அதற்கு காரணம், அவை ஓர் இடத்தில் தயாரிக்கப்பட்டு, மற்றவர்களுக்கு எல்லாம் ஜெராக்ஸ் எடுத்துக் கொடுத்து, அந்த எண்ணிக்கையோடு 10 இடங்களைக் கூட்டியும், 10 இடங்களைக் குறைத்தும் வெளியிடும்படி அனைத்து தொலைக்காட்சிகளிலும் இந்த 350-400 என்ற எண்களை வெளியிட்டு பா.ஜ.க பொய்ப் பிரச்சாரம் செய்தது. மக்களை முட்டாளாக்கினார்கள். இப்படி, எந்த அளவுக்கு மக்களை முட்டாள் ஆக்குவதற்காக பா.ஜ.க முயற்சித்தது என்பதைப் பார்த்தோம். அதையெல்லாம், மீறி பா.ஜ.க-வுக்கு இந்த நாட்டு மக்கள் அடக்கத்தைக் கற்றுத் தந்துள்ளனர். நாளை மறுநாள் பிரதமர் மோடி மீண்டும் பிரதமராக பொறுப்பேற்கிறார்.தன்னுடைய பேச்சில், ஜவஹர்லால் நேரு உடன் தன்னை ஒப்பிட்டுக் கொள்கிறார். அதாவது அவருக்கு கிடைத்தது, 282, 303, 240 இந்த மூன்று எண்ணிக்கையிலான இடங்கள்தான். ஆனால் ஜவஹர்லால் நேருவுக்கு கிடைத்தது, 361, 374 மற்றும் 364. ஜவஹர்லால் நேருவோடு பிரதமர் மோடி தன்னை ஒப்பிட்டுக் கொள்வதை, நாங்கள் நிராகரிக்கிறோம். இந்த நாட்டு மக்களும் நிராகரிப்பார்கள். மூன்றாவது முறை பொறுப்பேற்கும் மோடிக்கு, குடிமகன் என்ற முறையில், அவரது அரசை வாழ்த்துகிறோம். அதே நேரத்தில், எதிர்க்கட்சி என்ற முறையில், அந்த அரசின் செயல்பாடுகளை நாங்கள் கண்டிப்பாக கண்காணிப்போம்,” என்றார்.

அப்போது அவரிடம், இ.வி.எம் பற்றி காங்கிரஸ் இப்போது ஏன் பேசவில்லை, காங்கிரஸ் ஏன் வெற்றி பெற்றதை கொண்டாடுகிறது என்று பிரதமர் பேசியது குறித்து கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த ப. சிதம்பரம், “காங்கிரஸ் கட்சியினுடைய தேர்தல் அறிக்கையில், இவிஎம்-ஐ நாங்கள் நிராகரிக்கவில்லை. எனவே, தயவுகூர்ந்து தேர்தல் அறிக்கையைப் படித்துப் பாருங்கள். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்துடன் இணைக்கப்பட்டுள்ள விவிபாட்டில், வாக்களித்தப் பின்னர், வாக்காளர்களுக்குத் தெரியும் வண்ணம் அது 4-5 விநாடிகள் காட்சியளிக்கிறது. பிறகு அந்த தாள் அந்தப் பெட்டியினுள் விழுந்துவிடுகிறது. நாங்கள் கூறுவது, இந்த இவிஎம் முறையில், இன்னொரு முன்னேற்றத்தைச் செய்ய வேண்டும்.

வி.வி.பாட் உள்ளே விழும் தாளை வாக்காளரே எடுத்து அந்த பெட்டிக்குள் போடும் வசதிகளை செய்யலாம். இந்த சிறிய மாற்றத்தை செய்தால், இ.வி.எம், வி.வி.பாட் முறையில் யாருக்கும் எந்த சந்தேகமும் எழாது. இப்போதுகூட 10-க்கு 3 முதல் 4 பேரிடம் இ.வி.எம் குறித்து கேட்டால், அவர்கள் இ.வி.எம் குறித்து சந்தேகிக்கின்றனர். என்னைப் பொறுத்தவரை, இ.வி.எம் குறித்து நான் குறை கூறியதே கிடையாது. ஆனால், அந்த இ.வி.எம்-ஐ மேலும் மெருகூட்டி, செம்மைப்படுத்தி, சீர்படுத்த வேண்டும் என்பதுதான் எங்கள் கட்சியின் நிலை.

ஒரு தேர்தலில் காங்கிரஸ் கட்சி முதல் இடத்திலும், பா.ஜ.க இரண்டாவது இடத்திலும் இருந்தது. அப்போது தான் அந்த கட்சியினுடைய தலைவரான எல்.கே.அத்வானி, The winner comes second என்று கூறினார். இந்த தேர்தலில், தார்மிக வெற்றி என்பது காங்கிரஸ் கட்சிக்குத்தான். தார்மிக தோல்வி யாருக்காவது ஏற்பட்டிருக்கிறது என்றால், அது நரேந்திர மோடிக்குத்தான். எனவே, நாங்கள் கொண்டாடுவதில், அவருக்கு என்ன வருத்தம், பொறாமை. அவரும் கொண்டாட்டும், யார் வேண்டாம் எனச் கூறியது. அவர்கள் களையிழந்து, பொலிவிழந்து, உற்சாம் இழந்து இருப்பதை நான் பார்க்கிறேன். நாங்கள் கொண்டாடுகிறோம். அவருக்கு என்ன பொறாமை” என்று ப. சிதம்பரம் கேள்வி எழுப்பினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

P Chidambaram
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment