New Update
00:00
/ 00:00
தென் சென்னை தி.மு.க வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியனுக்கு ஆதரவாக மயிலாப்பூரில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம், எந்த முகத்தை வைத்துக்கொண்டு பிரதமர் மோடி தமிழ்நாட்டிற்கு வருகிறார் என்று அதிரடியாக கேள்வி எழுப்பியுள்ளார்.
மயிலாப்பூரில் நடந்த பிரசாரப் பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் பேசியதாவது: “அ.தி.மு.க ஆட்சியில் 10 ஆண்டுகளில் 3 பேர் முதலமைச்சராக இருந்தனர். அதில் முத்தான ஒரு திட்டத்தை யாராவது சொல்ல முடியுமா?, ஆனால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் மூன்றே ஆண்டுகளில் பல முத்தான திட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. பெண்களுக்கு நகரப் பேருந்தில் இலவச பயணம்; காலை உணவு திட்டம் என முத்திரை திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. தி.மு.க. அரசின் ரூ.1,000 திட்டம் மகளிருக்கு மட்டுமின்றி ஆண்களுக்கும் பயன் தருகிறது.
10 ஆண்டுகால பா.ஜ.க. ஆட்சியில் கொண்டு வந்த முத்தான திட்டங்கள் என்னென்ன?. புயல், வெள்ள பாதிப்பு நிதியை கூட பா.ஜ.க அரசு தரவில்லை. நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துள்ளது. பா.ஜ.க. ஆட்சியில் விலைவாசி உயர்ந்துள்ளது. இவ்வாறு இருக்க பிரதமர் மோடி எந்த முகத்தை வைத்துக்கொண்டு தமிழகத்திற்கு ஓட்டு கேட்டு வருகிறார்.
காங்கிரஸ் ஆட்சியில் சர்வதேச சந்தையில் ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் 145 டாலருக்கு விற்பனையானபோதும் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.75, டீசல் ரூ.65-க்கு விற்கப்பட்டது. தற்போது கச்சா எண்ணெய் 80 டாலராக குறைந்துள்ளபோதும் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100-க்கு விற்பனையாகிறது. நான் அச்சமூட்டுவதாக நினைக்க வேண்டாம் மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்படவில்லை என்றால்.. அடுத்த 5 ஆண்டுகளுக்குப் பிறகு தேர்தல் வருமா என்பதே சந்தேகம்தான்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சரை கைது செய்யும் அதிகாரம் மத்திய அரசுக்கு உண்டு என கற்பனை செய்து பார்த்திருக்கிறீர்களா?. சினிமாவில் கூட இப்படி பார்த்ததில்லை. ஏன் நாவலிலும் கூட படித்ததில்லை. பல நாடுகளின் பார்வையில் இந்தியா அழிவை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது” என்று கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.