Advertisment

கச்சத்தீவு விவகாரம்: இலங்கைத் தமிழர்களை மீட்டு புது வாழ்வு தந்தவர் இந்திரா காந்தி; மோடி செய்தது என்ன? ப.சிதம்பரம் கேள்வி

மோடி செய்தது என்ன? 2000 சதுர கி.மீ இந்திய பூமியைச் சீனா அபகரித்திருக்கிறது. ஆனால், எந்தச் சீனத் துருப்புகளும் இந்திய மண்ணில் இல்லை என்று சொல்லி சீனாவின் ஆக்கிரமிப்பை மோடி நியாயப்படுத்தினார் என்று ப. சிதம்பரம் விமர்சித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
Senior Congress leader P Chidambaram on SC verdict abrogate Article 370 Tamil News

ப. சிதம்பரம்

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, இந்தியா கச்சத்தீவை இலங்கைக்கு அளித்தது தொடர்பான ஆர்.டி.ஐ தகவல்களை வெளியிட்டு தேர்தல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தினார். மக்களவைத் தேர்தலையொட்டி, கச்சத்தீவு விவகாரம் பூதாகரமாகியுள்ளது. 

Advertisment

இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதற்கு 1974 ஆம் ஆண்டு கச்சத்தீவு இலங்கைக்கு அளிக்கப்பட்டதுதான் காரணம் என்றும் இதற்கு மத்தியில் ஆட்சியில் இருந்த இந்திரா காந்தி தலைமையிலான காங்கிரஸ் கட்சியும், மாநிலத்தில் ஆட்சியில் இருந்த தி.மு.க-வுதான் காரணம் என்று குற்றம்சாட்டி பா.ஜ.க விமர்சித்து வருகின்றனர்.

இதையடுத்து, பிரதமர் மோடி இந்த விவகாரத்தில் தி.மு.க-வின் ‘இரட்டை வேடம் அம்பலமாகிவிட்டது’ என்று கூறி விமர்சித்தார். 

மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கச்சத்தீவு விவகாரம் தொடர்பாக டெல்லியில் பா.ஜ.க தலைமையகத்தில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறுகையில், “காங்கிரஸ் மற்றும் தி.மு.க. ஆகிய இரு கட்சிகளும் தங்களுக்கு எந்தப் பொறுப்பும் இல்லை என்பது போல் இந்த விவகாரத்தை அணுகியுள்ளன” என்று  கூறினார். மேலும், கட்சத்தீவு இலங்கைக் தாரை வார்க்கப்பட்டதற்கு இரண்டு கட்சிகளையும் அவர் குற்றம் சாட்டினார்.

இதைத் தொடர்ந்து, முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரம், “ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க.,வின் ஊதுகுழலாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் செயல்படுகிறார்” என்று குற்றம் சாட்டினார்.

இது குறித்து ப. சிதம்பரம் தனது எக்ஸ் பக்கத்தில், “பழிக்குப் பழி எல்லாம் பழங்கதை. ட்வீட்டுக்கு ட்வீட் தான் புதிய ரக ஆயுதம். வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் 27.1.2015 தேதியிடப்பட்ட ஆர்டிஐ மனுவை திரும்பப் பார்க்குமாறு வேண்டுகிறேன்.அந்தத் தேதியில் அவர் தான் நம் நாட்டின் வெளியுறவு அமைச்சராக இருந்தார் என நினைக்கிறேன். அந்த ஆர்டிஐ பதிலில், இலங்கையிடம் கச்சத்தீவை இந்தியா வழங்கியதற்கான சூழலை நியாயப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், இப்போது ஏன் வெளியுறவு அமைச்சகமும் அமைச்சரும் அந்தர் பல்டி அடிக்கின்றனர் எனத் தெரியவில்லை.

எப்படி மனிதர்களால் இவ்வளவு வேகமாக நிறம் மாறிக்கொள்ள முடிகிறது? ஒரு சாதுவான, தாராள சிந்தனை கொண்டவராக இருந்தவர் ஒரு புத்திசாலித்தனமான வெளியுறவு அமைச்சராக, ஆர்எஸ்எஸ் - பாஜகவின் ஆதரவாளராக மாறியிருக்கிறார். ஜெய்சங்கரின் காலமும் வாழ்க்கையும் வரலாற்றில் பதிவு செய்யப்படும்” என்று பதிவிட்டுள்ளார்.

ப. சிதம்பரம் மற்றொரு பதிவில், “கடந்த 50 ஆண்டுகளாக மீனவர்கள் சிறைப்பிடிக்கப்பட்டுள்ளனர் என்பது உண்மையே. அதேபோல் இந்தியாவும் நிறைய இலங்கை மீனவர்களை சிறைப்பிடித்துள்ளது. இங்கிருந்த ஒவ்வொரு அரசாங்கமும் இலங்கை அரசுடன் சமரசப் பேச்சுவார்த்தை பேசி அவ்வப்போது நமது மீனவர்களை மீட்டும் உள்ளது. இது ஜெய்சங்கர் வெளியுறவு அதிகாரியாக இருந்தபோதும் நடந்துள்ளது. அவர் வெளியுறவு அமைச்சராக இருந்தபோதும் நடந்துள்ளது.

ஆனால், இப்போது மட்டும் காங்கிரஸ், தி.மு.க.வுக்கு எதிராக ஜெய்சங்கர் பேச என்ன மாறிவிட்டது? வாஜ்பாய் பிரதமராக இருந்தபோதும், பா.ஜ.க ஆட்சியில் இருந்தபோதும் அது பல்வேறு அரசியல் கட்சிகளுடன் கூட்டணியில் இருந்தபோதும் நடந்துள்ளது. 2014-ல் மோடி பிரதமரான பின்னர் இலங்கையால் மீனவர்கள் கைது செய்யப்படவே இல்லையா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

அதே போல, கச்சத்தீவு விவகாரம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடியின் விமர்சனத்துக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரம் தனது எக்ஸ் பக்கத்தில் பதிலடி கொடுத்துள்ளார். அந்த பதிவில் ப. சிதம்பரம் கூறியிருப்பதாவது: “1974ஆம் ஆண்டில் இரு நாடுகளிடயே நடந்த பரிமாற்றத்தைத் திரு மோடி அவர்கள் இப்பொழுது ஏன் கிளப்புகிறார்? 

கச்சத்தீவின் பரப்பளவு 1.9 சதுர கி்.மீ.  அதனைத் தந்து 6 லட்சம் இலங்கைத் தமிழர்களை மீட்டு அவர்களுக்குச் சுதந்திரமும் புது வாழ்வும் தந்தவர் இந்திரா காந்தி 

திரு மோடி செய்தது என்ன? 2000 சதுர கி.மீ இந்திய பூமியைச் சீனா அபகரித்திருக்கிறது. "எந்தச் சீனத் துருப்புகளும் இந்திய மண்ணில் இல்லை" என்று சொல்லி சீனாவின் ஆக்கிரமிப்பைத் திரு மோடி நியாயப்படுத்தினார் 

திரு மோடியின் பேச்சை சீனா உலகமெங்கும் பரப்பியது

சீனா அபகரித்துள்ள நிலம் ஒரு சிறிய தீவை விட 1000 மடங்கு பெரியது 

நல்லுணர்வுடன் பரிமாற்றம் வேறு, காழ்ப்புணர்வுடன் அபகரிப்பது வேறு” என்று பதிவிட்டுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

P Chidambaram
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment