மணிப்பூரில் ஏற்பட்டுள்ள வன்முறை மற்றும் பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்திற்கு அம்மாநில முதல்வர் பிரேன் சிங் பதவி விலக வேண்டும் என முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் எம்.பி.,யுமான ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
மணிப்பூர் குக்கி மற்றும் மெய்தி சமூகங்களுக்கு இடையிலான மோதல் கடந்த 2 மாதங்களாக தொடர்ந்து வருகிறது. இந்தநிலையில், மணிப்பூரில் பெண்களை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த வீடியோ சமீபத்தில் வெளியாக நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதனையடுத்து மணிப்பூர் நிலைமை குறித்து உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. எதிர்க்கட்சிகள் பிரதமர் விளக்கம் அளிக்கக் கோரி நாடாளுமன்றத்தை முடக்கி வருகின்றனர்.
இதையும் படியுங்கள்: ‘பொறுமையை தவறாக புரிந்து கொள்ள வேண்டாம்’: சீமானுக்கு ஜவாஹிருல்லா, ராஜ்கிரண் எச்சரிக்கை
இந்தநிலையில், முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் எம்.பி.,யுமான ப.சிதம்பரம், மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங் பதவி விலக வேண்டும் எனக் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்,
மணிப்பூர் அரசாங்கத்தின் மீதான உச்ச நீதிமன்றத்தின் குற்றச்சாட்டுகள் டெல்லியில் உள்ள PMO (பிரதமர் அலுவலகம்) மற்றும் இம்பாலில் உள்ள CMO (முதல்வர் அலுவலகம்) க்கு சென்றடைய எவ்வளவு காலம் ஆகும்?
மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங்கிற்கு அரசியல் சட்ட நெறிமுறைகள் பற்றி சிறிதேனும் புரிதல் இருந்தால், அவர் உடனடியாக பதவி விலக வேண்டும்.
ராஜதர்மத்தை கடைப்பிடிப்பவர்களால் மட்டுமே ராஜதர்மத்தை போதிக்க முடியும்
மானபங்கம் செய்யப்பட்ட பெண்களிடம் "சாவி இல்லை" என்று சொன்ன போலீஸ் ஜீப் டிரைவர் போல மத்திய அரசு உள்ளது!
மத்திய அரசு அரசியலமைப்பு பொறுப்பின் இயந்திரத்தை (பிரிவு 355 & 356) அணைத்து சாவியை தூக்கி எறிந்துள்ளது. இவ்வாறு ப.சிதம்பரம் பதிவிட்டுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil