P Chidambaram | Tamil Nadu: ஆளும் பா.ஜ.க அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் 'இந்தியா' கூட்டணியை அமைத்துள்ளன. இந்தக் கூட்டணியில் இதுவரை 28 கட்சிகள் இணைந்துள்ளன. இதில், காங்கிரஸ், ஆம் ஆத்மி போன்ற தேசிய கட்சிகளும், தி.மு.க போன்ற மாநில கட்சிகளும் இடம் பிடித்துள்ளன.
'இந்தியா' கூட்டணி தொகுதி பங்கீடு குறித்து பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது. இந்த நிலையில், தமிழகத்தில் தொகுதிப் பங்கீடு விரைவில் இறுதி செய்யப்படும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
காரைக்குடியில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:-
இந்திய கூட்டணியில் உள்ள 28 கட்சிகளும் மாநிலங்களவையில் சீட் கேட்கவில்லை. மாநிலங்களுக்குள் உள்ள கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு செய்யப்படுகிறது, அது சுமுகமாக முடிவடையும். இந்திய கூட்டணிக்கான தொகுதிப் பங்கீடு குறித்து தேசிய அளவில் அல்ல, மாநில அளவில் விவாதிக்கப்படும். கேரளாவிலும் பீகாரிலும் ஏறக்குறைய முடிவுக்கு வந்த நிலையில் தமிழகத்தில் விரைவில் முடிந்துவிடும்.
நாட்டின் பெயரை மாற்றும் பா.ஜ.க-வின் முயற்சியின் நோக்கம் புரியவில்லை. அரசியலமைப்புச் சட்டத்தின்படி, ‘பாரதமாகிய இந்தியா மாநிலங்களின் ஒன்றியமாக இருக்கும்’. அவர்களின் எண்ணம் நல்லதாக இருந்தால், ஆங்கிலத்தில் எழுதும் போது இந்தியா, இந்தியில் எழுதும் போது பாரத் ஆகிய இரண்டு வார்த்தைகளையும் பயன்படுத்தலாம். நாங்கள் பாரதத்திற்கு எதிரானவர்கள் அல்ல. ஆனால், பாரதீய ஜனதா இந்தியாவுக்கு எதிரானது போல் செயல்படுகிறது,.
மற்ற மாநிலங்களில் நடைபெற்ற 7 இடைத்தேர்தல்களில் நான்கில் வெற்றி பெற்றிருப்பது பா.ஜ.க-வை தேர்தலில் தோற்கடிக்க முடியும் என்பதைக் காட்டுகிறது.
‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ கொண்டுவருவது எளிதல்ல. ஆனால், மாநில அரசுகளை பலவீனப்படுத்த பா.ஜ.க அதையே கொண்டு வர முயற்சிக்கிறது. "ஒரு நாடு, ஒரே அரசாங்கத்தை நோக்கி நகர்வதே அவர்களின் நோக்கம். இவ்வாறு காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“