தமிழகத்தில் 2026-ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் சட்டமன்ற தேர்தலின் போது, மறைந்த பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடியை, திருவள்ளூர் தொகுதியில் போட்டியிட வைத்து வெற்றிபெறச் செய்வோம் என திரைப்பட இயக்குநர் பா. ரஞ்சித் தெரிவித்துள்ளார்.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், பெரம்பூர் செம்பியம் பகுதியில் அவரது வீட்டின் அருகே 6 பேர் கொண்ட கும்பலால் கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் பல்வேறு கட்சியைச் சேர்ந்தவர்கள் ஈடுபட்டுள்ளதாக கூறப்பட்ட நிலையில், முக்கிய குற்றவாளியான ரவுடி திருவேங்கடம் போலீசாரால் என்கவுண்டர் செய்யப்பட்டார்.
இந்நிலையில், 'காலம் தந்த தலைவர் ஆம்ஸ்ட்ராங்' என்ற புத்தக வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இப்புத்தகத்தை, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு வெளியிட்டார். இதில், இயக்குநர்கள் பா.ரஞ்சித், வெற்றிமாறன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இவ்விழாவில் பா. ரஞ்சித் உரையாற்றினார்.
அவர் பேசுகையில், "ஆம்ஸ்ட்ராங் சம்பந்தப்பட்டவர்களுடன் நிறைய விவாதித்து வருகிறேன். அரசியல் ரீதியாக என்ன மாற்றம் செய்யப்போகிறோம் என்பது முக்கியம். இங்கு பகுஜன் சமாஜ் கட்சித் தோழர்கள் நிறைய பேர் இருக்கிறீர்கள். எனவே ஒரு திட்டத்தோடு 2026 தேர்தல் சூழலை நாம் பார்க்க வேண்டும். ஆம்ஸ்ட்ராங்கை நாம் ஒரு தவிர்க்க முடியாத சக்தியாக மாற்ற வேண்டும். திருமதி ஆம்ஸ்ட்ராங் அவர்களை திருவள்ளூர் தொகுதியில் வெற்றி பெற வைக்க இப்போது முதலே வேலை செய்ய வேண்டும்.
நிச்சயமாக நம்மால் ஜெயிக்க முடியும். நம் அண்ணன்கள், தாத்தாக்கள் வட மாவட்டங்களில் தனித்து நின்று வென்ற வரலாறு இருக்கிறது. அதை மீள் உருவாக்கும் செய்யும் வாய்ப்பை உருவாக்குவோம். ஒரு தொகுதியை குறிப்வைத்து வேலை செய்யலாம். ஆம்ஸ்ட்ராங் யார் என்று கேட்டார்களே.. அவர்களுக்கு பதில் சொல்வோம். நான் வேலை செய்யத் தயார். திருவள்ளூர் தொகுதியில் இறங்கலாம். கன்சிராம் போல திண்ணை தோறும் போய் பிரச்சாரம் செய்வோம். இன்னும் 2 வருடங்கள் இருக்கின்றன. வெற்றி, தோல்வி முக்கியம் அல்ல; சண்டை செய்வது தான் முக்கியம்.
எங்களை எதைக் கொண்டும் மிரட்ட முடியாது. எதைக் கொண்டும் எங்களை விலைக்கு வாங்க முடியாது. திருமதி ஆம்ஸ்ட்ராங் அவர்களை வெற்றி பெற வைத்து சட்டமன்றத்துக்கு அனுப்புவோம். அவரது வெற்றிக்காக அனைவரும் உழைக்க வேண்டும். நமக்கு ஒரு பிரச்சனை என்றால் ஆம்ஸ்ட்ராங் அண்ணன் வந்தார் இல்லையா.. 15 வழக்கறிஞர்களை அனுப்பி அலற விட்டார் இல்லையா? இன்றைக்கும் தமிழக அரசியல் சூழலில் தலித்களின் ஓட்டு மிக முக்கியமானது என்பதை யாரும் மறுக்க முடியாது.
யார் யாரோ வெற்றி பெறுகிறார்கள்.. நாம் ஏன் வெல்ல முடியாது? இந்தியாவில் 3% இருப்பவர்கள் இந்த நாட்டை ஆளும்போது நம்மால் ஏன் முடியாது? திருமதி ஆம்ஸ்ட்ராங் அவர்களை சட்டமன்றத்துக்கு அனுப்புவோம்." எனக் கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.