சாதிய வன்கொடுமைக்கு ஆளாகி கல்வியை விடாமல் தொடர்ந்து படித்து 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் சிறந்த மதிப்பெண் பெற்று வெற்றி பெற்ற நாங்குநேரி மாணவர் சின்னத்துரையை இயக்குநர் பா.ரஞ்சித் நேரில் அழைத்துப் பாராட்டினார்.
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியைச் சேர்ந்த பள்ளி மாணவர் சின்னத்துரை கடந்தாண்டு சக மாணவர்களால் தாக்கப்பட்டு அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. குறிப்பிட்ட மாணவர்கள் சின்னத்துரையுடன் சாதி பாகுபாட்டோடு நடந்து கொண்டு சாதி ரீதியாக தாக்கியுள்ளனர். இதன் பின் உச்சகட்டமாக அந்த மாணவர்கள் சாதிய வன்கொடுமை காரணமாக சின்னத்துரையை வீடு புகுந்த அரிவாளால் வெட்டித் தாக்கினர்.
இதில் படுகாயமடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இது தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து சின்னத்துரை தாக்கியவர்களை கைது செய்தனர்.
இந்நிலையில், சின்னத்துரை 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதியிருந்தார். தேர்வுகள் முடிவுகள் வெளியான நிலையில் அவர் பொதுத்தேர்வில் 600-க்கு 469 மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றார். சாதிய வன்கொடுமைக்கு ஆளாகி கல்வியை விடாமல் தொடர்ந்து படித்து தேர்வில் வெற்றி பெற்ற சின்னத்துரையை முதல்வர் ஸ்டாலின், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் உள்பட பலரும் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
இந்நிலையில், இயக்குநரும், நீலம் பண்பாட்டு மையம் நிறுவனருமான பா.ரஞ்சித் நேற்று மாணவர் சின்னத்துரையை நேரில் அழைத்து பாராட்டினார். அவருக்கு சால்வை அணிவித்து, புத்தகங்களை பரிசளித்து ரஞ்சித் வாழ்த்தினார். தொடர்ந்து, கல்லூரி கட்டணம் மற்றும் எவ்வித உதவியாக இருப்பினும் நீலம் பண்பாட்டு மையம் செய்வதற்கு தயாராக இருக்கிறது என்று பா.ரஞ்சித் உறுதியளித்தார். "சாதியை முற்றும் ஒழித்தல்" என்ற நூலினை சின்னதுரைக்கும் அவரின் தங்கைக்கும் ரஞ்சித் பரிசளித்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“