உச்சநீதிமன்றம் நியமித்த குழு பிறப்பித்த உத்தரவை மீறி, 5,300 ஏக்கர் நிலத்தில் 237 விற்பனைப் பத்திரங்களை, அதிகாரிகள் அத்துமீறி பதிவு செய்ததாக எழுந்த புகாரின் பேரில் தமிழக பதிவுத் துறை விசாரணையைத் தொடங்கியுள்ளது.
பிஏசிஎல் (Pearl Agrotech Corporation Limited) சிட் ஃபண்ட் ஊழல் தொடர்பாக, வாங்கிய நிலங்களை கையகப்படுத்தி, அதன் மூலம் கிடைக்கும் பணத்தை, 5.6 கோடி முதலீட்டாளர்களிடம் செலுத்த வேண்டும் என்று நீதிபதி (ஓய்வு) ஆர்எம் லோதா கமிட்டிக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
ஏமாந்த மக்களிடமிருந்த இந்த நிறுவனம், 18 ஆண்டுகளில் சட்டவிரோத கூட்டு முதலீட்டு திட்டம் (சிஐஎஸ்) மூலம் ரூ.60 ஆயிரம் கோடிக்கு மேல் வசூலித்ததாகக் கூறப்படுகிறது.
லோதா கமிட்டியின் நோடல் அதிகாரி மற்றும் செயலாளர் அனுப்பிய கடிதத்தின்படி, மொத்தம் 8,198 சொத்து ஆவணங்கள் தமிழகத்தின் அதிகார வரம்பிற்குள் அடங்கும்.
இதனிடையே, தமிழகத்தில் 2016 முதல் 2022 வரை சட்டவிரோதமாகப் பதிவு செய்யப்பட்ட ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை மீட்கப் போவதாக பதிவுத் துறை உயர் அதிகாரி வெள்ளிக்கிழமை உறுதியளித்தார்.
நிலத்தை மீட்க பதிவுத் துறை தவறியதாக எழுந்த குற்றச்சாட்டுகளை நிராகரித்த அதிகாரி, “16 முதல் 17 பேர் மீது நடவடிக்கை எடுத்துள்ளோம். விஜிலென்ஸ் மற்றும் ஊழல் தடுப்பு இயக்குனரகமும் விசாரணையைத் தொடங்கியுள்ளது. மோசடியாக பதிவு செய்யப்பட்ட பிஏசிஎல் நிறுவனத்துக்குச் சொந்தமான அனைத்து நிலங்களும் மீட்கப்படும் என்றார்.
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் மோசடி குறித்த விவரங்களை சேகரித்த அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன், பதிவுத் துறை உயர் அதிகாரிகள் மற்றும் பிற அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் இந்தப் பதிவு நடந்ததாகக் குற்றம்சாட்டினார்.
தேனி, தென்காசி, திருச்சி, மதுரை, விருதுநகர், சிவகங்கை, தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய இடங்களில் முறைகேடு பதிவுகள் நடந்துள்ளன.
பிப்ரவரி 2, 2016 இல், உச்ச நீதிமன்றம், இந்திய முன்னாள் தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதாவின் கீழ் ஒரு குழுவை அமைக்குமாறு, இந்திய பங்குகள் மற்றும் பரிவர்த்தனை வாரியத்திற்கு (SEBI)உத்தரவிட்டது.
பிஏசிஎல் மூலம் வாங்கப்பட்ட நிலங்களை கையகப்படுத்தி, மின்னனு ஏலம் மூலம் விற்று கிடைக்கும் தொகையை ஏமாந்த முதலீட்டாளர்களுக்கு செலுத்த, உத்தரவு பிறப்பித்தது. அந்த குழு இந்நிறுவனம் வசம் உள்ள அனைத்து நிலங்களையும் கையகப்படுத்தியது. பிஏசிஎல் நிறுவனத்தின் சொத்துக்களை விற்க லோதா கமிட்டிக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது என்று தமிழக பத்திரப் பதிவுத் துறை ஐஜிக்கு, லோதா குழு கடிதம் மூலம் 2016 ஆகஸ்ட் மாதம் தெரிவித்தது. ஆனால் அதையும் மீறி பதிவுத்துறை அதிகாரிகளுடன் ஒத்துழைப்புடன் பல இடங்களில் நிலங்கள் விற்பகபட்டுள்ளன.
பதிவுத் துறை கூடுதல் ஐஜி கே.வி.சீனிவாசன் மற்றும் மாநிலம் முழுவதும் உள்ள அவரது கூட்டாளிகள், துணை அதிகாரிகள் இந்தக் குற்றத்தில் ஈடுபட்டுள்ளனர் என்று ஜெயராம் குற்றம்சாட்டினார். எனவே, அவர்கள் மீது, எஃப்.ஐ.ஆர் பதிவு செய்து முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என அவர் கோரினார்.
இதற்கு மறுப்பு தெரிவித்த சீனிவாசன், "விஜிலென்ஸ் விசாரணை நடந்து வருகிறது. அடுத்த மாதம் நான் ஓய்வு பெறுகிறேன். அதனால்தான் இந்தக் குற்றச்சாட்டுகளை எழுப்புகிறார்கள்" என்றார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“