Advertisment

பத்மஸ்ரீ விருது பெற்ற கோவை பாப்பம்மாள் மரணம்

இயற்கை விவசாய பணிக்காக பத்மஸ்ரீ விருது பெற்ற கோவை பாப்பம்மாள் உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 108.

author-image
WebDesk
New Update
pappammal

இயற்கை விவசாய பணிக்காக பத்மஸ்ரீ விருது பெற்ற கோவை பாப்பம்மாள் உடல்நலக் குறைவால் காலமானார்.

இயற்கை விவசாய பணிக்காக பத்மஸ்ரீ விருது பெற்ற கோவை பாப்பம்மாள் உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 108. 

Advertisment

கோயம்புத்தூர் மாவட்டம், தேக்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பாப்பம்மாள்(108). இயற்கை விவசாயத்தில் பாப்பம்மாளின் பங்களிப்பை பாராட்டி கடந்த 2021ஆம் ஆண்டு, மத்திய அரசு அவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி கெளரவித்தது.

அண்மையில், பாப்பம்மாளுக்கு தி.மு.க சார்பில் பெரியார் விருதும் வழங்கப்பட்டது.

இந்நிலையில், பாப்பம்மாள் வயது முதிவு காரணமாக உடல் நலக் குறைவு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் வெள்ளிக்கிழமை காலமானார்.  பாப்பம்மாள் மறைவுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். 

இது குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது, “கழக முன்னோடியும் - கடந்த 17-ம் நாள் நடைபெற்ற முப்பெரும் விழாவில் பெரியார் விருது பெற்றவருமான பாப்பம்மாள் 108 அகவையில் மறைவெய்தினார் என்ற துயரச் செய்தியறிந்து கலங்கினேன்.

பேரறிஞர் அண்ணா மீதும் - முத்தமிழறிஞர் கலைஞர் மீதும் பற்றுக் கொண்டு, கழகம் தொடங்கப்பட்ட நாள் முதல் தன்னை இயக்கத்துக்காக அர்ப்பணித்துக் கொண்டு பணியாற்றியவர்.

1965-ம் ஆண்டு நடைபெற்ற இந்தித் திணிப்பிற்கு எதிரான போராட்டம் தொடங்கி, தமிழ்நாட்டு மாணவர்களின் நலன் காக்க நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம் வரை அத்தனை போராட்டக்களங்களையும் நெஞ்சுரத்தோடு எதிர்கொண்டவர் அவர்.

1959-ம் ஆண்டு தேக்கம்பட்டி ஊராட்சி உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பாப்பம்மாள், 1964-ல் காரமடை ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினராகவும், பின்னர் தேக்கம்பட்டி ஊராட்சி மன்றத் துணைத் தலைவராகவும் பொறுப்பேற்று பணியாற்றினார்.

1970-ம் ஆண்டு தொடங்கி 45 ஆண்டுகாலம் தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழக உழவர் விவாதக்குழு உறுப்பினராகச் செயல்பட்டார்.

1965-ம் ஆண்டிலேயே மாதர் சங்கத் தலைவராகச் செயல்பட்டு, கிராமப் பெண்களின் முன்னேற்றத்துக்கான சமூகப் பணிகளை மேற்கொண்டார்.

தனது இறுதிமூச்சு வரையில், சுறுசுறுப்பாக வயலில் இறங்கி வேளாண் பணிகள் செய்து வந்தவர் பாப்பம்மாள்.

பாப்பம்மாள் வாழ்வையும் தொண்டையும் போற்றும் வகையில் ஒன்றிய அரசு சார்பாக கடந்த 2021-ம் ஆண்டு பத்மஶ்ரீ விருது வழங்கப்பட்டது. அப்போது, ‘உற்சாகத்துடனும், கொள்கை உணர்வோடும் எப்பொழுதும் புன்னகை மாறாத பாப்பம்மாள் பாட்டி நமக்கெல்லாம் உந்துசக்தி!’ என்று அவரை வாழ்த்தினேன்.

கழக முப்பெரும் விழாவில், ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டின் அடையாளம் என அவரை மனம் நெகிழப் பாராட்டி மகிழ்ந்திருந்தேன். ஆனால், இன்று சொல்லொணாத் துயரத்தில் நம்மையெல்லாம் ஆழ்த்தி விட்டு அவர் நம்மைவிட்டு பிரிந்துவிட்டார்.

அண்ணா அறிவாலயத்திலும், எனது இல்லத்திலும் பாப்பம்மாள் அவர்களைச் சந்தித்து உரையாடிய ஒவ்வொரு தருணமும் என் நெஞ்சில் எப்போதும் நீங்காமல் பசுமையாக இருக்கும்.

என் குடும்பத்தில் ஒருவரைப் பிரிந்த வலியுடன் தவிக்கிறேன். பாப்பம்மாள் அவர்களை இழந்து தவிக்கும் குடும்பத்தினர், உறவினர்கள், கழக உடன்பிறப்புகள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment