தமிழகத்தைச் சேர்ந்த பரதநாட்டியக் கலைஞரும், கர்நாடக சங்கீத கலைஞருமான வைஜெயந்திமாலா பாலி, பரதநாட்டியக் கலைஞர் பத்மா சுப்ரமணியமிற்கு மத்திய அரசின் பத்ம விபூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. மறைந்த நடிகர் விஜயகாந்த்-க்கு பத்ம பூஷன் விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் உயரிய விருதான பத்ம விபூஷன், பத்ம பூஷன், பத்ம ஸ்ரீ ஆகிய பத்ம விருதுகள் பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்களுக்கு ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அதில், கலைத்துறையில் சிறப்பாக சேவையற்றி சாதனை படைத்த தமிழகத்தைச் சேர்ந்த பரதநாட்டியக் கலைஞரும், கர்நாடக சங்கீத கலைஞருமான வைஜெயந்திமாலா பாலி, பரதநாட்டியக் கலைஞர் பத்மா சுப்ரமணியம், ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த நடிகர் கொனிதெலா சிரஞ்சீவி, பொதுவாழ்க்கையில் வெங்கையா நாயுடு, சமூக சேவைக்காக பீகாரைச் பிந்தேஷ்வர் பதக் (இறப்பிற்குப் பிறகு) ஆகிய 5 பேருக்கு பத்ம விபூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு பத்ம பூஷன் விருது 17 பேர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அதில், மறைந்த முன்னாள் தமிழக ஆளுநர் பாத்திமா பீவிக்கு பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
கலைத்துறையில் சிறப்பான சேவை ஆற்றிய தே.மு.தி.க தலைவர், நடிகர் விஜயகாந்த்க்கு (இறப்பிற்குப் பிறகு) மத்திய அரசின் பத்ம பூஷன் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அண்மையில், நடிகர் விஜயகாந்த் உடல்நலக் குறைவால் காலமானார்.
அதே போல, கோவையைச் சேர்ந்த வள்ளி ஒயில் கும்மி நடனக் கலைஞர் பத்ரப்பனுக்கு (87) ஒன்றிய அரசின் பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
கலைத்துறையில், தமிழகத்தைச் சேர்ந்த சேஷம்பட்டி டி. சிவலிங்கத்திற்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
விவசாயத் துறையில் சிறப்பாக செயல்பட்ட, அந்தமான் நிக்கோபார் தீவுகளைச் சேர்ந்த செல்லம்மாள் என்பவருக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
விளையாட்டுத் துறையில் தமிழகத்தைச் சேர்ந்த ஜோஷ்னா சினாப்பாவுக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
இலக்கியம் மற்றும் கல்வித்துறையில், தமிழகத்தைச் சேர்ந்த எழுத்தாளர் ஜோ டி குருஸ்-க்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவத்துறையில் தமிழகத்தைச் சேர்ந்த ஜி. நாச்சியாருக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“