இளையராஜாவுக்கு பத்ம விபூஷன் விருதை மத்திய அரசு அறிவித்ததை தொடர்ந்து, அவருக்கு பல்வேறு தரப்பினரிடம் இருந்தும் வாழ்த்துகள் வந்து குவிகின்றன.
இளையராஜா, தமிழ் சினிமா இசை உலகின் பெரும் சாதனையாளர்! இவருக்கு குடியரசு தின விழாவையொட்டி மத்திய அரசு பத்ம விபூஷன் விருதை அறிவித்திருக்கிறது. இது குறித்து கருத்து தெரிவித்த இளையராஜா, ‘பத்ம விபூஷண் விருது பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. மத்திய அரசு என்னை கௌரவித்ததாக கருதவில்லை; தமிழகத்தையும், தமிழ் மக்களையும் கௌரவித்ததாக கருதுகிறேன்’ என்றார் இளையராஜா.
பத்மவிபூஷன் விருது அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து பல்வேறு தரப்பிலும் இருந்து இளையராஜாவுக்கு வாழ்த்துகள் வந்து குவிகின்றன.
எடப்பாடி பழனிசாமி (தமிழ்நாடு முதல் அமைச்சர்) : ‘இளையராஜா அவர்களுக்கு இந்தியாவின் இரண்டாவது உயரிய விருதான பத்ம விபூஷன் விருது கிடைத்ததற்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளை பெருமையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.’
ஓ.பன்னீர்செல்வம் (துணை முதல்வர்) : ‘பத்மவிபூஷண் விருதுபெறும் இளையராஜா அவர்களுக்கும், பத்மபூஷண் விருதுபெறும் தமிழகத்தைச் சேர்ந்த தொல்லியல் ஆய்வாளர் ராமசந்திரன் நாகசுவாமி அவர்களுக்கும் எனது வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.’
மு.க.ஸ்டாலின் (திமுக செயல் தலைவர்) : ‘கலைத்துறையில் சிறந்த சேவை ஆற்றியதற்காக பத்ம விபூஷன் விருது பெறும் இசைஞானி இளையராஜா அவர்களுக்கும், பல்வேறு துறைகளில் பெரும்பங்காற்றி பத்மஸ்ரீ விருது பெறும் தமிழகத்தைச் சேர்ந்த அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.’
விஜயகாந்த் (தே.மு.தி.க. தலைவர்) : ‘பத்ம விபூஷன் விருது பெறும் இசைஞானி இளையராஜா அவர்களுக்கு எனது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன். மேலும் பல விருதுகள் பெற்று, விருதுகளுக்கு பெருமை சேர்க்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்.’
தமிழிசை சவுந்தரராஜன் (பாஜக, தமிழ்நாடு தலைவர்) : ‘பத்ம விபூஷண் விருது பெரும் இசையமைப்பாளர் இளையராஜா அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்.’
கவிஞர் வைரமுத்து : ‘காற்றின் தேசம் எங்கும் உந்தன் கானம் என்றும் தங்கும் - வாழும் லோகம் ஏழும் உந்தன் ராகம் சென்று ஆளும், வாகை சூடும்’
டி.டி.வி.தினகரன் (ஆர்.கே.நகர் எம்.எல்.ஏ.) : ‘இசை ஞானி இளையராஜா அவர்களுக்கு நாட்டின் இரண்டாவது உயரிய சிவிலியன் விருதான 'பத்ம விபூஷன்' விருது அறிவிக்கப்பட்டு இருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. பண்ணைபுரத்திலிருந்து புறப்பட்டு, தனது அபரிதமான திறமையால் உலகளவில் இசை மணம் பரப்பி வரும் 'மேஸ்ட்ரோ' இளையராஜாவிற்கு வழங்கப்பட்டுள்ள இந்த கவுரவம் மிகவும் பொருத்தமானது.
அவரது இசையை கொண்டாடும் ரசிகர்களுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழர்களுக்கும் மகிழ்ச்சியான தருணமிது. இளையராஜா அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.’