எளிமையோ எளிமை: நண்பரின் வாட்ச் கடைக்கு வந்த புதுவை முதல்வர்; அங்கே வந்து சந்தித்த இன்னொரு வி.ஐ.பி!

புதுச்சேரியில் ஹீமோபிலியா நோய்க்கான மருந்து மிக எளிதாக கிடைக்க பிரதமர் மோடியிடம் தாங்கள் அழுத்தம் கொடுக்க வேண்டும்; பத்மஸ்ரீ விருது பெற்ற டாக்டர் நளினி, முதல்வர் ரங்கசாமியிடம் வலியுறுத்தல்

Dr Nalini
புதுச்சேரி முதல்வரிடம் பத்மஸ்ரீ விருது பெற்ற டாக்டர் நளினி வாழ்த்துப் பெற்றார்

புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி எப்பொழுதும் பதவியில் இருந்தாலும் இல்லையென்றாலும் தனது நெருங்கிய நண்பரின் வாட்ச் கடையில் உட்கார்ந்து பேசுவது வழக்கம். அதேபோல் இன்று வழக்கம் போல் தனது நண்பரின் வாட்ச் கடையில் பேசிக் கொண்டிருந்தபோது பத்மஸ்ரீ விருது பெற்ற டாக்டர் நளினி முதல்வரிடம் பத்மஸ்ரீ விருதை காண்பித்து வாழ்த்து பெற்றார்.

அரியவகை நோயான ஹீமோபிலியா நோய் பாதித்த குழந்தைகளுக்காக புதுச்சேரி டாக்டர் நளினி தனது வாழ்க்கையை அர்ப்பணித்து சேவை செய்து வருகிறார். அவரைப் பாராட்டி மத்திய அரசு பத்மஸ்ரீ விருது அறிவித்தது.

இதையும் படியுங்கள்: புதுவை சுனாமி குடியிருப்பில் புறக் காவல் நிலையம்: வீடு வீடாக சென்று மன்னிப்பு கேட்ட சமூக ஆர்வலர்

இந்தநிலையில் பத்மஸ்ரீ விருது வழங்கும் விழா டெல்லியில் ஜனாதிபதி மாளிகையில் 23ஆம் தேதி நடந்தது. இந்த விழாவில் டாக்டர் நளினி பார்த்தசாரதிக்கு பத்மஸ்ரீ விருதை ஜனாதிபதி திரவுபதி  முர்மு வழங்கினார்.

விருது பெற்ற டாக்டர் நளினி புதுச்சேரி ஜிப்மரில் பயின்று இங்கேயே குழந்தைகள் மருத்துவராக பணியை தொடங்கினார். தற்போது ஹீமோபிலியா நோய் குறித்து பல்வேறு ஆராய்ச்சி செய்து வருகிறார். இந்த நோய் பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருந்து விலை அதிகமாக உள்ளது. இந்த மருந்து விலை குறைவாகவும் தாராளமாகவும் கிடைக்க பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டும், இந்த மருந்தை இந்தியாவிலேயே தயாரிக்க வேண்டும். என டாக்டர் நளினி பிரதமருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

அதைத்தொடர்ந்து இன்று நண்பரின் கடையான புதுச்சேரி நேரு வீதியில் உள்ள வாட்ச் கடையில் புதுச்சேரி முதல்வர் பேசிக் கொண்டிருந்தபோது, பத்மஸ்ரீ விருது பெற்ற டாக்டர் நளினி மற்றும் அவரது உறவினர்கள் வாட்ச் கடைக்கு வந்து முதல்வர் ரங்கசாமியிடம் பத்மஸ்ரீ விருதை காண்பித்து சால்வை அணிவித்து வாழ்த்து பெற்றார். அப்பொழுது இந்த மருந்து புதுச்சேரியில் மிக எளிதாக கிடைக்க பிரதமர் மோடியிடம் தாங்கள் அழுத்தம் கொடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். முதல்வருடன் அவரது நண்பர்கள் மற்றும் வக்கீல் ராம முனுசாமி உடன் இருந்தார்.

பாபு ராஜேந்திரன், புதுச்சேரி

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Padmasri awardee dr nalini gets appreciation from puducherry cm rangasamy

Exit mobile version