/indian-express-tamil/media/media_files/2025/04/26/Gh5ljtBCyDAT6HuliFxE.jpg)
பஹல்காம் தாக்குதலில் படுகாயமடைந்த தமிழக மருத்துவருக்கு ஐசியூவில் தீவிர சிகிச்சை!
காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் காயம் அடைந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த மருத்துவர், ஏர் ஆம்புலன்ஸ் மூலம் டெல்லி அழைத்துவரப்பட்டு, எய்ம்ஸ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பஹல்காமில் கடந்த செவ்வாய்க்கிழமை பிற்பகல் பாகிஸ்தான் தீவிரவாதிகள் என சந்தேகிக்கப்படும் சிலர் கண்மூடித்தனமாக நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 26 இந்தியர்கள் பரிதாபமாக உயிரிழந்தது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பயங்கரவாத தாக்குதலின்போது கழுத்து மற்றும் வயிற்றில் குண்டடி பட்டு பலத்த காயமடைந்த பரமேஸ்வரன், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளார். அவரது உடல்நிலை மோசமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனிடையே, மருத்துவர் பரமேஸ்வரனின் மனைவியிடம் விசாரித்து தேவைப்படும் அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என ஆறுதல் அளித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி அளித்தார்.
காஞ்சிபுரத்தைச் சேர்ந்த 31 வயதான காது மூக்கு தொண்டை அறுவை சிகிச்சை நிபுணர் பரமேஸ்வரன், அனந்த்நாக்கில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் முதற்கட்ட அறுவை சிகிச்சைக்குப் பிறகு செவ்வாய்க்கிழமை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ஏர் ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டார். அவரது சிகிச்சையில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் குடல் மற்றும் கல்லீரலில் பலத்த காயங்கள் இருப்பதாகவும், வலது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாகவும் தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் தெரிவித்தன.
"அவர் குணமடைய நாங்கள் பிரார்த்தனை செய்கிறோம், அவரை வீட்டிற்கு அழைத்துச்செல்ல முடியும்" என்று பரமேஸ்வரனின் மனைவியின் தாய்மாமா திலக் கூறினார். சம்பவத்திற்குப் பிறகு பரமேஸ்வரன் எதுவும் பேசவில்லை, தாக்குதலில் ஏற்பட்ட அதிர்ச்சியை குடும்பத்தினர் சுட்டிக்காட்டினர். "பஹல்காமில் உள்ள உணவகங்களில் ஒன்றில் அவரை ஒரு நாற்காலியில் உட்கார வைத்து உள்ளூர்வாசிகளிடம் உதவி கேட்டது அவர்தான். உள்ளூர் காவல்துறையின் உதவியுடன், அவர்கள் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்" என்று திலக் கூறினார்.
எய்ம்ஸ் மருத்துவமனை வட்டாரங்களின்படி, “பஹல்காமில் உள்ளூர் மருத்துவமனையில் முக்கிய அறுவை சிகிச்சையை மேற்கொள்ளப்பட்டது. ஆனால் நோயாளிக்கு தீவிரமான காயம் இருந்ததால், அவர் ஏர் ஆம்புலன்சில் டெல்லி எய்ம்ஸ்க்கு மாற்றப்பட்டார்.”
வயிற்றிற்கு மிக அருகில் இருந்து துப்பாக்கிச் சூடு நடத்தினால் கல்லீரல் மற்றும் குடலுக்கு கடுமையான சேதம் ஏற்படும் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். கல்லீரலில் இருந்து ரத்தம் வெளியேறி, உடல் அதிர்ச்சியில் உறைந்து போகும். அதே நேரத்தில் குடல்களில் துளையிட்டு ரத்தப்போக்கு ஏற்படும். அவரது காயங்களின் தீவிரத்தை கருத்தில் கொண்டு, அடுத்த சில நாட்கள் தீவிர கண்காணிப்பு தேவை என்று எய்ம்ஸ் மருத்துவர்கள் தெரிவித்தனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.