திண்டுக்கல் மாவட்டம், பழனி முருகன் கோயிலில் தைப்பூசத் திருவிழா நடைபெற்று வருகிறது. பத்து நாட்கள் நடைபெறும் இந்த தைப்பூசத் திருவிழாவில் நாளை (பிப் 11) தைப்பூச தேரோட்டம் நடைபெற உள்ளது.
இதையொட்டி, பிப்ரவரி 10, 11 மற்றும் 12 ஆகிய மூன்று நாட்களும் மலைக்கோயில் சாமி தரிசனம் செய்ய கட்டணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் எவ்விதமான கட்டணமும் இன்றி பக்தர்கள் இலவசமாக மலைக்கோயிலில் சாமி தரிசனம் செய்யலாம் என அறிவிக்கபட்டுள்ளது.
இந்நிலையில், இன்றைய தினம் நடைபெற்ற முருகன், வள்ளி தெய்வானை திருமணத்தை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் வருகை தந்திருந்தனர். இதனால் போக்குவரத்தை சீரமைக்கும் வகையில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
இதேபோல், பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை நகராட்சி நிர்வாகம் செய்து கொடுத்திருந்தது. இடும்பம் குளம் அருகே பாதுகாப்பு பணியில் தீயணைப்பு துறையினர் விழிப்புணர்வு நிகழ்வை மேற்கொண்டனர்.
செய்தி - க.சண்முகவடிவேல்