பாலமேடு ஜல்லிக்கட்டில் துள்ளிப் பாய்ந்த காளை முட்டித் தள்ளியதில் 19 வயது இளைஞர் பலியானார். மேலும் ஒருவர் கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
பாலமேடு, மதுரை மாவட்டத்திற்கு உட்பட்ட கிராமம்! அலங்காநல்லூருக்கு அடுத்தபடியாக ஜல்லிக்கட்டுக்கு பெயர் பெற்ற ஊர் இது! இன்று காலையில் இருந்து அங்கு ஜல்லிக்கட்டு நடந்தது.
பாலமேடு ஜல்லிக்கட்டுக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து 458 காளைகள் கொண்டு வரப்பட்டன. அவற்றை அடக்குவதற்காக சுமார் 700 வீரர்கள் களமிறங்கினர். தமிழ்நாடு அரசின் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், மதுரை மாவட்ட கலெக்டர் வீரராகவ ராவ் ஆகியோர் போட்டியை கொடியசைத்து தொடங்கி வைத்தனர். வாடிவாசலில் இருந்து துள்ளிக் குதித்து வந்த காளைகளை இளைஞர்கள் பலர் அடக்கினர்.
பாலமேடு ஜல்லிக்கட்டு விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருந்தபோது காளைகளை உரிமையாளர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்வு நடந்தது. அங்கு வேடிக்கை பார்க்க நின்றிருந்தவர்களை நோக்கி ஒரு காளை ஆவேசமாக சீறிப் பாய்ந்தது. அந்தக் காளை முட்டியதில் சுமார் 25 பேர் காயமடைந்தனர்.
காயமடைந்தவர்களுக்கு அங்கிருந்த மருத்துவர் குழுவினர் முதல் உதவி சிகிச்சை அளித்தனர். மோசமான நிலையில் படுகாயமடைந்திருந்தவர்கள் மதுரை, ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களில் திண்டுக்கல் மாவட்டம், சானார்பட்டி கிராமத்தை சேர்ந்த காளிமுத்து(19) மருத்துவமனை செல்லும் வழியிலேயே மரணம் அடைந்தார்.
மதுரையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள ஐந்து நபர்களில் ஒருவரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது. காயமடைந்தவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.