தமிழக அரசின் காலை உணவு திட்டத்தில் வேலை பார்த்த பெண் சமையலருக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் தலைமறைவாக இருந்த திண்டுக்கல் மேற்கு மாவட்ட பாஜக முன்னாள் செயலாளர் மகுடீஸ்வரனை கர்நாடகாவில் வைத்து தனிப்படை போலீஸார் இன்று கைது செய்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே சாமிநாதபுரத்தில் செயல்பட்டு வரும் அரசுப்பள்ளி ஒன்றில் 30 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இங்கு தமிழக அரசின் காலை உணவு திட்டத்தின் கீழ் உணவு சமைப்பதற்காக பெண் ஊழியர் ஒருவர் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்.
இவர் திங்கள் கிழமை (ஏப்.8) காலை வழக்கம் போல் சமையல் செய்வதற்காக பள்ளிகூடத்திற்கு சென்று கொண்டு இருந்தார்.
அப்போது அந்த வழியாக புஷ்பத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் செல்வராணியின் கணவரும், பாஜக திண்டுக்கல் மேற்கு மாவட்ட செயலாளருமான மகுடீஸ்வரன் வந்துள்ளார். அப்போது அவர் மதுபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது.
பெண் சமையலரை வழிமறித்த அவர், சமையல் செய்யும் இடத்தில் கணக்கு பார்க்க வேண்டும் என கூறி தன் டூவிலரில் அழைத்து சென்றிருக்கிறார். அப்போது சமையல் கூடத்தில் இருந்த பொருட்களை எடுத்துக்காட்டி கொண்டிருக்கும் போது அவரிடம் மகுடீஸ்வரன் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு உள்ளார்.
இந்த சம்பவம் குறித்து அப்பெண் சாமிநாதபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதனை அடுத்து விசாரணை மேற்கொண்ட போலீஸார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான மகுடீஸ்வரனை தேடி வந்தனர்.
மேலும், அவர் வகித்து வந்த மேற்கு மாவட்ட செயலாளர் மற்றும் ஒன்றிய பார்வையாளர் பொறுப்புகளில் இருந்து நீக்குவதாக திண்டுக்கல் மாவட்ட தலைவர் பழனி கனகராஜ் அறிவித்தார்.
இந்நிலையில் கர்நாடக மாநிலம் மங்களூரில் 4 நாட்களாக பதுங்கி இருந்த மகுடீஸ்வரனை தனிப்படை போலீஸார் இன்று கைது செய்தனர். அவரை திண்டுக்கல்லுக்கு அழைத்து வந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க போலீஸார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“