பாலேஸ்வரம் கருணை இல்லத்தில் நடந்தது என்ன? : இடதுசாரி உண்மை அறியும் குழுக்களின் முரண்பட்ட அறிக்கை

பாலேஸ்வரம் கருணை இல்லம் தொடர்பாக இடதுசாரிகள் இடையே இரு பார்வை வெளிப்பட்டிருக்கிறது. இரு குழுக்கள் நேரடி ஆய்வு செய்து வெவ்வேறு அறிக்கைகளை கொடுத்தன.

பாலேஸ்வரம் கருணை இல்லம் தொடர்பாக இடதுசாரிகள் இடையே இரு பார்வை வெளிப்பட்டிருக்கிறது. இரு குழுக்கள் நேரடி ஆய்வு செய்து வெவ்வேறு அறிக்கைகளை கொடுத்தன.

பாலேஸ்வரம் கருணை இல்லம்…! சமீப நாட்களாக மீடியாவில் அதிகம் அடிபட்ட பெயர்களில் ஒன்று! காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் அருகே இருக்கிறது பாலேஸ்வரம். இங்குள்ள செயின்ட் ஜோசப் கருணை இல்லத்தில் முதியவர்கள் எலும்புக்காக கொல்லப்படுவதாக கிளம்பிய சர்ச்சை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பாலேஸ்வரம் கருணை இல்லத்தில் அநியாயங்கள் நடப்பதாக ஒரு தரப்பும், இந்தப் புகாரே மத ரீதியான குரோதம் என இன்னொரு தரப்பினரும் கூறி வந்தனர். அரசு இந்த கருணை இல்லத்தை மூட உத்தரவிட்டதும், கருணை இல்லம் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகி நிவாரணம் பெற்றிருப்பதும் அண்மை தகவல்கள்!

பாலேஸ்வரம் கருணை இல்லம் விவகாரம் தொடர்பாக ஆய்வு நடத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஒரு குழு அனுப்பி வைக்கப்பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மத்தியக் குழு உறுப்பினர் உ.வாசுகி தலைமையில், அக்கட்சியின் காஞ்சிபுரம் மாவட்டச் செயலாளர் சங்கர், மாநிலக் குழு உறுப்பினர் பிரமிளா, மாவட்ட செயற்குழு உறுப்பினர் முத்துக்குமார் ஆகியோரை கொண்ட அந்த ஆய்வுக் குழு சமீபத்தில் பாலேஸ்வரம் கருணை இல்லத்துக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டது.

பாலேஸ்வரம் கருணை இல்லம் குறித்து அந்தக் குழு வெளியிட்ட ஆய்வறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

பாலேஸ்வரத்தில் உள்ள கருணை இல்லம் சமூக நலத் துறையின் அனுமதியுடன் கடந்த 7 ஆண்டுகளாக பாதிரியார் தாமஸால் நடத்தப்படுகிறது. அது திருச்சபையால் நடத்தப்படவில்லை. அண்மையில் இந்த கருணை இல்லத்தின் ஆம்புலன்ஸில் இருந்து, ‘காப்பாற்றுங்கள்’ என்று அபயக்குரல் எழுப்பிய ஒரு பெண்மணியும், மயக்க நிலையில் இருந்த ஒரு முதியவரும் மீட்கப்பட்டனர். அத்துடன் இறந்தவரின் சடலம், கருணை இல்லத்துக்கான காய்கறி மூட்டைகளும் கைப்பற்றப்பட்டன.

கருணை இல்லத்தில் உள்ள அடுக்குக் கல்லறை அமைப்புக்கு அனுமதி வாங்கியிருப்பதாக பாதிரியார் தாமஸ் கூறினார். ஆவணங்களைப் பார்த்ததில் 2011-ல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (எஸ்.பி.) தடையில்லா சான்றிதழ் அளித்ததை அனுமதி என்று கூறிக்கொண்டிருக்கிறார் என்பதை புரிந்துகொள்ள முடிந்தது.

எஸ்.பி.க்கு பாதிரியார் தாமஸ் அனுப்பிய மனுவில், இல்லத்தில் தங்கியிருப்பவர்கள் மட்டுமின்றி, வழியில் இறந்துபோனால் அந்த சடலத்தையும் கொண்டுவந்து அடக்கம் செய்ய அனுமதி கோரியுள்ளார். இந்த மனுவை மேல் நடவடிக்கைக்காக மாவட்ட ஆட்சியருக்கு எஸ்.பி. அனுப்பியுள்ளார். அதன்பிறகு, எஸ்.பி. நேரடியாக பாதிரியாருக்கு ‘தடையில்லா சான்றிதழ்’ போன்ற ஒரு கடிதத்தை அனுப்பியுள்ளார்.

இதுபோன்ற சான்றிதழ் அளிக்க எஸ்.பி.க்கு அதிகாரம் இல்லை என்பதை மாவட்ட ஆட்சியரே ஒப்புக் கொண்டுள்ளார். ஒரு தனியார் அமைப்பு, பொதுமக்களை அடக்கம் செய்யும் கல்லறையை தம் நிறுவனத்துக்குள் அமைத் துக் கொள்ள எப்படி அனுமதி வழங்க முடியும்?

வேலூரில் இருந்துகூட சடலங்கள் இங்கு வருகின்றன என்கிறார்கள். எனவே, இதை வெறும் சேவை என்பதாகப் பார்க்க முடியவில்லை. எலும்புக் கூடு விற்பனை செய்யப்படுகிறதா, மருந்துகள் தயாரிக்க மனித எலும்புத் துகள்கள் பயன்படுத்தப்படுகிறதா என்ற கேள்விகள் எழுகின்றன. உயிரோடு இருப்பவர்கள் உலவும் இடத்திலேயே கல்லறை இருப்பது அங்குள்ளவர்களுக்கு கடும் மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது.

மனநலம் குன்றியவர்கள் மீது சிறப்பு கவனம் இருக்க வேண்டும். ஆனால் சாதாரணமாக இருப்பவர்களும், மனநலம் குன்றியவர்களும் ஒன்றாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். அங்குள்ள சிலரிடம் விசாரித்தபோது, மருத்துவரும் சரியாக வருவது கிடையாது. மருந்துகளும் கொடுப்பது இல்லை எனத் தெரிவித்தனர். இதனால், அங்கு இருப்பவர்கள் அப்படியே இறந்து போகட்டும் என விடப்படுகிறார்களா என்கிற சந்தேகமும் எழுகிறது.

விருப்பம் இல்லாதவர்கள்கூட நிர்ப்பந்தப்படுத்தி அழைத்து வரப்படுகின்றனர். வீட்டுக்குப் போக விரும்புபவர்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது என்றும் தெரியவருகிறது. சமீபத்தில் ஆம்புலன்ஸில் இருந்து மீட்கப்பட்ட பெண்மணியும், ‘வீட்டில் கோபித்துக் கொண்டு வந்து கொண்டிருந்தேன், என்னைப் பிடித்து ஆம்புலன்ஸில் ஏற்றிவிட்டனர். இறக்கி விடுங்கள் என்றாலும் கேட்கவில்லை’ என்று கூறியது ஊடகங்களில் வெளியாகி இருந்தது.

கோபிச்செட்டிப்பாளையத்தில் இருந்து வந்த ஒருவர், அரசு அதிகாரி ஒருவரிடம் செல்போனை வாங்கி, வீட்டுக்கு பேசினார். எங்கள் கண் முன்னாலேயே, ‘நான் இந்த இடத்தில் இருக்கிறேன், வீடு திரும்பி விடுவேன்’ என அவர் கூறியதைக் கேட்டோம். ஒரு முதியவர், ‘சளி அதிகம் என்பதால் தாம்பரம் சானடோரியம் சென்றுவிட்டு திரும் பிக் கொண்டிருந்தேன், என்னைப் பிடித்து இங்கு அழைத்து வந்துவிட்டனர். திரும்பிப் போக அனு மதிக்கவில்லை’ என்றார்.

மனநலம் குன்றியவர்கள் சிலர் ஆடையில்லாமல் நடமாடிக் கொண்டிருக்கின்றனர் என்றும் தெரிகிறது. இது மனித உரிமை மீறலாகும். அரசுக்கு தகவல் தெரிவிக்காமலேயே இறந்தவர்களை அடக்கம் செய்துள்ளனர். அனுமதி புதுப்பிக்கப்படாமலேயே கடந்த 5 மாதங்களாக கருணை இல்லம் செயல்பட்டு வந்துள்ளது. இல்லத்துக்கு அழைத்து வரப்படுபவர்கள் குறித்த பதிவேடு முறையாக இல்லை.

அங்குள்ள ஒருவரின் பெயர் வேறு. ஆனால், அவர் குத்தியிருந்த அடையாள அட்டை யில் வேறு பெயர் இருந்தது. அவரிடம் கேட்டபோது, பெயர் மாற்றத்தை ஒப்புக்கொண்டார்.
இல்லத்தின் செயல்பாடுகள் குறித்து விவரம் தெரிந்த ஓர் இளைஞரைச் சில நாட்களாகக் காணவில்லை என்கின்றனர். காலையில் கஞ்சி, மதியமும், இரவும் ரேஷன் அரிசியில் சாம்பார் சாதம் மட்டுமே தருவதாக அங்கு தங்கியிருந்த சிலர் கூறினர். இட்லியைப் பார்த்தே பல காலம் ஆகிறது என்றனர்.

இது தொடர்பாக ஓர் உயர்மட்ட விசாரணை நடத்தி குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும். இக்குற்றங்களுக்கு துணைபோன அரசு, காவல் துறை அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வீட்டுக்குப் போக விரும்பு பவர்களை அனுப்பி வைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். தமிழகம் முழுவதும் அரசு, தனியார் நடத்தும் முதியோர் இல்லம், மனநலம் குன்றியோர் இல்லம் போன்றவற்றை முறையாக ஆய்வு செய்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.

பாலேஸ்வரம் கருணை இல்ல விவகாரத்தில் இந்து முன்னணி ஏற்கெனவே மதச்சாயம் பூசத் தொடங்கிவிட்ட சூழலில், மத மோதல்கள் வராமல் தடுக்க வேண்டும். இவ்வாறு மார்க்சிஸ்ட் கட்சியின் ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
பாலேஸ்வரம் : மற்றொரு அறிக்கை

மக்கள் கண்காணிப்பகத்தின் முன் முயற்சியில் பேராசிரியர் அ.மார்க்ஸ், பேராசிரியர் பிரபா.கல்விமணி, பேரா. ஜவாகிருல்லா, தோழர் தியாகு, வழக்கறிஞர் ஆசீர், விடுதலை சிறுத்தைகள் வன்னியரசு, இயக்குனர் மு.களஞ்சியம் உள்ளிட்டவர்கள் பாலேஸ்வரம் புனித ஜோசப் கருணை இல்லத்தில் ஆய்வு நடத்தினர். இடதுசாரி கொள்கை சார்ந்த இந்த அமைப்பினர் வெளியிட்ட பரிந்துரைகள் மார்க்சிஸ்ட் பரிந்துரையில் இருந்து வேறுபடுகின்றன.

தங்கள் குழுவின் பரிந்துரையாக விடுதலை சிறுத்தைகள் துணைப் பொதுச்செயலாளர் வன்னியரசு இவற்றை பட்டியலிடுகிறார்…

1.செயின்ட் ஜோசப் ஆஸ்பிசஸ் நிறுவனம் செய்கிற பணி மகத்தானது. அதை ஊக்கப்படுத்த வேண்டும்.

2. இந்த நிறுவனம் மீது சுமத்தப்பட்ட யாவும் அவதூறானவை. பொய்யானவை.

3. இந்த நிறுவனம் முறைப்படி அனுமதி பெற்றே இயங்குகிறது.
புதுப்பிக்கபடாமைக்கு அரசே காரணம். புதுப்பிக்க அனுப்பபட்ட விண்ணப்பம் இதுவரை அரசு சார்பில்
எடுத்துக்கொள்ளப்படவில்லை. அரசு அதிகாரிகளின் மெத்தனத்தால் தான் இதுவரை புதுப்பிக்கப்பட வில்லை.

4. இந்த நிறுவனத்தின் மீதான குற்றச்சாட்டுகளுக்கு பின்னால் அரசு அதிகாரிகளின் ஊழலும், மதவாத பின்னணியும் இருப்பதை அறிய முடிந்தது.

5.இத்தகைய சேவை நிறுவனங்களுக்கு அரசும் பொதுமக்களும் கூடுதலான ஊக்கம் கொடுக்க வேண்டும்

6.நிறுவனத்தில் ஏதாவது சட்டமீறல் இருந்தால் அவற்றை அரசு சரிசெய்ய வேண்டுமேயொழிய, நிறுவனத்தை இழுத்து மூடக்கூடாது.

7.சாகும் தறுவாயில் இருந்த முதியவர்களை
அரசு அதிகாரிகள் அத்துமீறி நிறுவனத்துக்குள் புகுந்து அப்புறப்படுத்தியது வன்மையாக கண்டனத்துக்குரியது.
மனித உரிமை மீறலாகும்.

8.நிறுவனத்தின் மீது அனுப்பப்பட்ட மடல்கள் யாவையும் திருப்பி அனுப்பிய அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

9. செயின்ட் ஜோசப் ஆஸ்பிஸஸ் இல்லத்தை இப்போது முடக்கி வைத்திருக்கிறார்கள். இந்த நிலையை மாற்றி தொடர்ந்து நிறுவனம் செயல்படுவதற்கு அரசு ஆக்கப்பூர்வ ஏற்பாடுகளை செய்து உதவ வேண்டும்.

10. இது போன்ற சேவை நிறுவனங்களை தமிழகம் முழுக்க நடத்த தொண்டுள்ளம் படைத்தோரை கண்டறிந்து ஊக்கப்படுத்த வேண்டும். அப்போது தான் சாகும் தறுவாயிலாவது நல்லமுறையில் நல்லடக்கம்  செய்ய முடியும்.

மேற்கண்டவாறு கூறப்பட்டிருக்கிறது.

 

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close