பாலேஸ்வரம் செயின்ட் ஜோசப் ஆதரவற்றோர் கருணை இல்லம் மீதான அரசின் நடவடிக்கைகளுக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பாலேஸ்வரம் செயின்ட் ஜோசப் ஆதரவற்றோர் கருணை இல்லம் சமீப நாட்களாக மீடியாவில் முக்கிய செய்தி! காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் அருகே உள்ளது பாலேஸ்வரம். இந்த கிராமத்தில் ஆதரவற்றோர்களுக்கான கருணை இல்லம் 2011 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இந்த இல்லத்துக்கு சொந்தமான வேனில் காய்கறி மூட்டையுடன் இரும்புலியூர் இல்லத்தில் இறந்த விஜயகுமார் என்பவரது உடல் எடுத்து வரப்பட்டது.
பாலேஸ்வரம் கருணை இல்ல வேனில் பிணத்துடன் இரும்புலியூர் இல்லத்தில் தங்கி இருந்த செல்வராஜ், அன்னம்மாள் ஆகியோரும் அழைத்து வரப்பட்டனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
பாலேஸ்வரத்தில் உள்ள கருணை இல்லத்தில் முதியோர்கள் மர்மமாக இறப்பதாகவும், அவர்களது உடல் பதப்படுத்தப்பட்டு எலும்புகள் விற்கப்படுவதாகவும் பொது மக்கள் குற்றம் சாட்டினர். இதையடுத்து வருவாய்த் துறை, போலீசார் உள்பட 6 துறை அதிகாரிகள் பாலேஸ்வரம் கருணை இல்லத்தில் விசாரணை நடத்தி அக்கிருந்த சுமார் 300 முதியவர்கள் அரசு காப்பகங்களுக்கு மாற்றப்பட்டனர்.
இந்நிலையில் கடந்த மாதம் 22 ஆம் தேதி காஞ்சிபுரம் மாவட்ட வருவாய் கோட்டாசியர் விளக்கம் கோரி நோட்டிஸ் அனுப்பினார். அதில் பொது சுகாதாரத்திற்கு ஊறு விளைவிக்கும் வகையிலும், அரசு துறைகளில் இருந்து முறையான அனுமதி இன்றி கருணை இல்லம் செயல்படுவதால் காப்பகத்தை ஏன் மூட உத்தரவிடக் கூடாது என 7 நாட்களுக்குள் விளக்கம் அளிக்கும் படி நோட்டிஸ் அனுப்பட்டது.
இந்த நோட்டிஸுக்கு கடந்த மாதம் 28 ம் தேதி கருணை இல்லத்தின் சார்பில் பதில் அளிக்கப்பட்டுள்ளது. அதில் கருணை இல்லம் முறையான அனுமதியுடன் செயல்பட்டு வருவதாகவும், சுகாதார சீர்கேடு இல்லாத வகையிலும் , பொதுமக்களுக்கு இடையூறாக இல்லாத வகையில் உள்ளதாகவும், இறப்புகள் முறையாக பதிவு செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் வருவாய் கோட்டாட்சியர் அனுப்பிய இந்த நோட்டீஸை ரத்து செய்யக்கோரி கருணை இல்ல நிர்வாக இயக்குனர் தாமஸ் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. அதில் கருணை இல்லத்திற்கு சட்ட விதிகளை பின்பற்றாமல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. முறையாக அனுமதி பெற்று கருணை இல்லம் நடத்தி வருவதாகவும், எனவே கருணை இல்லத்திற்கு எதிராக அனுப்பப்பட்ட நோட்டீஸ் ரத்து செய்யவேண்டும். மேலும் மேற்கொண்டு எந்த நடவடிக்கை எடுக்க அரசுக்கு தடை விதிக்க வேண்டும் வருவாய் கோட்டாட்சியர் அனுப்பிய சட்ட விரோதம் என அறிவித்து ரத்து செய்ய வேண்டும் என மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு உயர்நீதிமன்ற நீதிபதி எம்.எஸ். ரமேஷ், முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது முறையாக அனுமதி பெற்று செயல்பட்டு வரும் கருணை இல்லத்தை ஏன் மூட வேண்டும் என நீதிபதி கேள்வி எழுப்பினார். பின்னர் உத்தரவிட்ட நீதிபதி, செயின்ட் ஜோசப் ஆதரவற்றோர் கருணை இல்லம் மீதான அரசின் நடவடிக்கைகளுக்கு இடைக்கால தடை விதிப்பதாகவும் விளக்க கடிதத்தின் மீது மேல் நடவடிக்கைகள் எடுக்க கூடாது என்றும் உத்தரவிட்டார். மனு தொடர்பாக தமிழக அரசு மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் , வருவாய் கோட்டாட்சியர் உள்ளிடோர் பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணை 21 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.