திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள கள்ளக்கிணறு கிராமத்தைச் சேர்ந்தவர் செந்தில் குமார் (47). கடந்த செப்டம்பர் -ம் தேதி இரவு இவரது வீட்டின் அருகே ஒரு கும்பல் மது அருந்திக் கொண்டிருந்ததாக தெரிகிறது. இதனை செந்தில் குமார் தட்டிக் கேட்டுள்ளார். அப்போது வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அங்கு செந்தில் குமாரின் உறவினர்கள் மோகன், புஷ்பவதி, ரத்தினாம்பாள் ஆகியோர் சென்றுள்ளார். வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த அந்த கும்பல் கூர்மையான ஆயுதங்களால் 4 பேரையும் வெட்டிப் படுகொலை செய்து தப்பி ஓடினர். இச்சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இச்சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர் வழக்கு தொடர்பாக ஒருவரை செல்லமுத்து என்பரை கைது செய்தனர். தொடர்ந்து முக்கிய குற்றவாளிகளை தேடி வந்த நிலையில், வெங்கடேஷ், சோனை முத்து நேற்று திருப்பூர் வடக்கு காவல் நிலையத்தில் சரண் அடைந்தனர்.
இதையடுத்து முதல் குற்றவாளியாக கருதப்படும் வெங்கடேஷிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். கொலைக்கான ஆயுதங்களை பதுக்கி வைத்திருந்த இடத்தை நேரில் காண்பிக்க அவரை அழைத்துச் சென்றுள்ளனர்.
அப்போது வெங்கடேஷ் போலீசார் மீது மண்ணைத் தூவி தப்பிக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து காவல்துறையினர் துப்பாக்கியால் சுட்டு அவரைப் பிடித்தனர். துப்பாக்கியால் சுட்டதில் வெங்கடேஷின் இரண்டு கால்களிலும் குண்டு பாய்ந்து காயம் ஏற்பட்டது. காயமடைந்த வெங்கடேஷை போலீசார் பல்லடம் அரசு மருத்துமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக வெங்கடேஷ் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பல்லடம் அரசு மருத்துவமனையில் மாவட்ட எஸ்.பி சாமிநாதன் வெங்கடேஷை நேரில் பார்வையிட்டார். மேலும் இவ்வழக்கில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்க போலீசாருக்கு மாவட்ட எஸ்.பி உத்தரவிட்டார்.
இவ்வழக்கில் இதுவரை 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வழக்கில் தொடர்புடையதாக வெங்கடேஷின் தந்தை ஐயப்பனையும் பல்லடம் போலீசார் நேற்று கைது செய்தனர்.
“தமிழ்இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“