திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள கள்ளக்கிணறு கிராமத்தைச் சேர்ந்தவர் செந்தில் குமார் (47). நேற்று முன் தினம் (செப்டம்பர் 3) இரவு இவரது வீட்டின் அருகே 3 பேர் கொண்ட கும்பல் மது அருந்திக் கொண்டிருந்ததாக தெரிகிறது. இதனை செந்தில் குமார் தட்டிக் கேட்டுள்ளார். அப்போது வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அங்கு செந்தில் குமாரின் உறவினர்கள் மோகன், புஷ்பவதி, ரத்தினாம்பாள் ஆகியோர் சென்றுள்ளார். வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த அந்த கும்பல் கூர்மையான ஆயுதங்களால் 4 பேரையும் வெட்டிப் படுகொலை செய்து தப்பி ஓடினர்.
தகவலறிந்த உறவினர்கள் இச்சம்பவத்தைக் கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தனிப் படை அமைத்து கொலையாளிகளை தேடி வருகின்றனர். இந்நிலையில் கொலை தொடர்பாக செல்லமுத்து என்பவரை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதல் குற்றவாளியான வெங்கடேசன் என்பவர் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். வெங்கடேசன், திருநெல்வேலி மாவட்டம் முக்கூடல் பகுதியைச் சேர்ந்தவர் என்றும் இவர் மீது ஏற்கனவே 4 வழக்குகள் உள்ளதாகவும் அதில் 3 முக்கூடலில் பதியப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
இந்நிலையில், பல்லடம் கொலை சம்பவம் தொடர்பாக 5 தனிப்படைகள் அமைக்கப்பட்ட நிலையில் 3 தனிப்படைகள் திருநெல்வேலியில் அமைக்கப்பட்டுள்ளது. நெல்லையில் வெங்கடேசனின் செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்ட இடத்தில் இருந்து சி.சி.டி.வி கேமராவில் பதிவான காட்சிகள் அடிப்படையில் போலீசார் தேடி வருகின்றனர். சைபர் க்ரைம் உதவியுடன் வெங்கடேசனை போலீசார் நெருங்கி வருகின்றனர். சி.சி.டி.வி காட்சி, செல்போன் சிக்னல்களின் அடிப்படையில்
தேடி வருகின்றனர். மேலும் வெங்கடேனின் உறவினர், நண்பர்களுடனும் போலீசார் தொடர் விசாரணை செய்து வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“