பழனி முருகன் கோயிலில் ஆகம விதிகளை மூலவர் தரிசனத்தை புகைப்படம் எடுத்து வெளியிட்ட தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் உள்ளிட்டோர் மீது கோயில் நிர்வாகம் தரப்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
தமிழக பாஜக நவம்பர் 6ம் தேதி முதல் டிசம்பர் 6ம் தேதி வரை வேல் யாத்திரையை அறிவித்தது. திருத்தணியில் தொடங்கிய வேல் யாத்திரை முருகப் பெருமானின் ஆறுபடை வீடுகளை இணைக்கும் விதமாக திருச்செந்தூரில் முடிவடையும் என்று அறிவிக்கப்பட்டது. வேல்யாத்திரையை பாஜக அரசியல் நோக்கத்துடன் நடத்துவதாகவும் வேல் யாத்திரை மூலம் மத ரீதியான பதற்றங்களை பாஜக திட்டமிட்டுள்ளதாக திமுக, விசிக, இடதுசாரி கட்சிகள் குற்றம்சாட்டியது. அதனால், வேல் யாத்திரைக்கு தமிழக அரசு அனுமதி அளிக்க கூடாது என்று வலியுறுத்தினர்.
கொரோனா வைரஸ் தொற்று பரவல் அச்சுறுத்தல் காரணமாக, தமிழக அரசு வேல் யாத்திரைக்கு தடை விதித்தது. ஆனால், நவம்பர் 6ம் தேதி தடையை மீறி தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தலைமையில் திருத்தணியில் வேல் யாத்திரை தொடங்கப்பட்டது. வேல் யாத்திரையில் கலந்துகொள்ளப்பட்ட அனைவரும் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டனர். அடுத்து வந்த நாட்களில் பாஜக தலைவர்கள் பல்வேறு இடங்களில் வேல் யாத்திரையைத் தொடங்கி கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டனர்.
இந்த நிலையில்தான், மத்திய இணை அமைச்சர் முரளிதரன், பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் வேல் யாத்திரைக்காக பழனி முருகன் கோயிலுக்கு நவம்பர் 23ம் தேதி வந்தனர். கொரோனா வைரஸ் தொற்று பரவல் அச்சுறுத்தலால், பழனி மலை அடிவாரத்தில் இருந்து பழனி முருகன் கோயிலுக்கு செல்லும் மின் இழுவை ரயில் நிறுத்தப்பட்டிருந்தது. மத்திய இணை அமைச்சர் முரளிதரன், பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன், பாஜக மாநில துணை தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர், பழனி முருகன் கோயிலுக்கு செல்லும் மின் இழுவை ரயில் மூலம் சென்றனர்.
இந்த சம்பவத்தை சுட்டிகாட்டிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர், பொது மக்கள் தரிசனத்திற்கு மின் இழுவை ரயிலை அனுமதிக்காத கோயில் நிர்வாகம், பாஜகவினரை மட்டும் மின் இழுவை ரயிலில் பயணம் செய்ய அனுமதித்தது விதிமீறல் என்று குற்றம் சாட்டினர்.
இந்த நிலையில், முருகப் பெருமானின் மூன்றாம் படைவீடாக வணங்கப்படும் பழனி திருஆவினன்குடி கோயிலில் மூலவரை பாஜக தலைவர் எல்.முருகன் தரிசனம் செய்வது ஓன்ற புகைப்படம் தமிழக பாஜகவின் அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியானது.
ஆகம விதிப்படி மூலவரை புகைப்படம் எடுப்பது விதிமீறல் என்பதால் புகைப்படம் எடுத்தவர்கள் மீது பழனி கோயில் நிர்வாகம் சார்பில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த புகார் மீது அறநிலையத்துறை ஆணையர் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் முதல்வரின் தனிப்பிரிவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்புல் புகார் மனு அளிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, ஊடகங்கள் இந்த புகார் விவகாகரம் குறித்து கோயில் நிர்வாகத்திடம் கேட்டபோது, தங்கள் கோரிக்கையை ஏற்று ஃபேஸ்புக் பக்கத்தில் இருந்து மூலவரின் புகைப்படம் நீக்கப்பட்டதால் புகார் மீது எந்த அழுத்தமும் கொடுக்கப்படவில்லை என்று தெரிவித்துள்ளனர்.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”