சேலத்தில் தலித் இளைஞர் கோயிலில் நுழைந்ததற்காக பஞ்சாயத்து தலைவர் ஆபசமாக பேசி மிரட்டிய வீடியோ வெளியானதைத் தொடர்ந்து, சஸ்பெண்ட் செய்யப்பட்ட நபருக்கு தி.மு.க-வில் மீண்டும் ஒன்றிய செயலாளர் பதவி அளிக்கப்பட்டுள்ளது.
சேலத்தில் தலித் இளைஞர் கோவிலில் நுழைந்ததற்காக அவரை ஆபசமாக பேசி மிரட்டல் விடுத்ததற்காக தி.மு.க-வில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட பஞ்சாயத்து தலைவர் சத்தமில்லாமல் மீண்டும் கட்சிக்குள் இணைக்கப்பட்டு ஒன்றிய செயலாளர் பதவியில் அமர்ந்துள்ளார்.
சேலம் மாவட்டம், திருமலைகிரி கிராமத்தின் பெரிய மாரியம்மன் கோவில் கருவறைக்கு அருகில் நுழைந்ததற்காக தலித் இளைஞர் எஸ். பிரவீன்குமாரை திருமலைகிரி பஞ்சாயத்து தலைவர் டி. மாணிக்கம் ஊர் பொதுவில் ஆபாச வார்த்தைகளால் திட்டி மிரட்டிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது. இதைத் தொடர்ந்து மாணிக்கத்தை தி.மு.க-வில் கட்சிப் பதவியில் இருந்தும் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தும் தி.மு.க மேலிடம் இடைநீக்கம் செய்தது.
அப்போது, தலித் இளைஞரை ஆபாசமாக திட்டியதற்காக ஸ்டீல் பிளாண்ட் போலீசார் மாணிக்கம் மீது எஸ்சி/எஸ்டி (வன்கொடுமை தடுப்பு) சட்டம் மற்றும் இந்திய தண்டனைச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். பின்னர், போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர், அவருக்கு ஜாமீன் கிடைத்தது.
இதனிடையே, தி.மு.க பொதுச் செயலாளர் துரைமுருகன் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்தியில், மாணிக்கம் தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்ததையடுத்து, அவர் மீண்டும் கட்சியில் பணியாற்ற வேண்டும் என்று கூறியதையடுத்து, அவர் மீதான நடவடிக்கை ரத்து செய்யப்பட்டு, சேலம் தெற்கு ஒன்றிய தி.மு.க செயலாளராக பணிபுரிய அனுமதிக்கப்படுகிறார் என்று அறிவித்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“