அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு தலைவர் ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் சென்னையில் இன்று ஆலோசனையில் ஈடுபட்டார். தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது ஓ.பன்னீர்செல்வம் முன்னிலையில் பண்ருட்டி ராமச்சந்திரன் கூறியதாவது; ‘3 மணி நேரமாக நடைபெற்ற ஆலோசனை கூட்டம் நிறைவு பெற்றுள்ளது. ஆலோசனை கூட்டத்தில் 3 முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு இடம்பெற்றிருந்தது. ஆனால் இன்று முதல் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு தனது உறவை முறித்துக்கொண்டது. தேசிய ஜனநாயக கூட்டணியில் இனி இடம்பெறாது. ஓ.பன்னீர்செல்வம் விரைவில் தமிழகத்தின் பல்வேறு இடங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். எந்த கட்சியுடனும் கூட்டணி என்பது தற்போது இல்லை. எதிர்காலத்தில் நிலமைக்கு ஏற்ப கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும்.
நிச்சயமாக இந்த ஆட்சியை அகற்றுவோம். மக்களுக்கு சேவை செய்யக்கூடிய நல்லாட்சி மீண்டும் தமிழகத்திலே மலர, அதற்குண்டான அத்தனை வியூகங்களையும் வகுத்து, நிச்சயமாக எங்களுடைய பயணம் தொடரும். அதுமட்டுமல்ல, பாராளுமன்றத் தேர்தல் விரைவில் வரவிருக்கிறது. பாராளுமன்றத் தேர்தலிலும் சரி, சட்டமன்றத் தேர்தலிலும் சரி, மிகப்பெரிய வெற்றியை நாங்கள் பெறுவோம். இதில் எந்தவிதமான மாற்றுக் கருத்தும் கிடையாது.
இந்த இயக்கம், ஜெயலலிதாவால் கட்டிக்காக்கப்பட்ட இயக்கம். இந்த இயக்கம், ஒரு சிலருடைய கைகளிலே சிக்கி சின்னாபின்னமாகி விடக்கூடாது. இந்த இயக்கத்தை மீட்டெடுப்போம். அதற்காகத்தான் எங்களுடைய தர்மயுத்தம். அந்த தர்மயுத்தம் தொடரும்.
எங்களுடைய இலக்கு, ஒரு சிலருடைய சுயநலத்திற்காக இந்த இயக்கம் சென்று விடக்கூடாது. இந்த இயக்கம், மக்களுக்கான இயக்கம். மக்களுக்காகவே இந்த இயக்கம் என்பதை அன்னை ஜெயலலிதா சொல்லி இருக்கிறார்கள். அதை காப்பாற்ற வேண்டிய தார்மீக பொறுப்பு எங்களுக்கு இருக்கிறது, தொண்டர்களுக்கு இருக்கிறது. அதை நாங்கள் காப்பாற்றுவோம். நிச்சயம் எங்களுடைய வெற்றி உறுதி. நிச்சயமாக எங்களுடைய பயணம் தொண்டர்களுக்கானது, மக்களுக்கானது. எங்களுடைய உரிமையை நாங்கள் நிலைநாட்டுவோம்.
தொண்டர்களுக்கு ஒரு அநீதி இழைக்கப்பட்டால், அதைத் தட்டிக் கேட்கக்கூடிய முழு உரிமையும், முழு தகுதியும் எங்களுக்கு உண்டு. அதை நாங்கள் காப்பாற்றுவோம். தொண்டர்களை காப்போம், என்று பண்ருட்டி ராமச்சந்திரன் கூறினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் ஆகியோரோடு ஓபிஎஸ்ஸின் மகன்களும் கலந்துகொண்டிருந்தனர்.