Panruti S. Ramachandran – O. Panneerselvam Tamil News: அ.தி.மு.கவில் ஒற்றை தலைமை விவகாரம் பூதாகாரமாக வெடித்த நிலையில், அதன் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கும் ஓ. பன்னீர் செல்வத்திற்கும் இடையே கடந்த ஆறு மாதங்களுக்கும் மேலாக மோதல் போக்கு இருந்து வருகிறது. இந்த மோதலின் உச்சமாக இரு தரப்பினரும் கட்சிக்கு உரிமை கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளனர். அந்த வழக்கு தற்போது நிலுவையில் இருக்கிறது.
இந்நிலையில், எடப்பாடி தரப்புக்கு நெருக்கடி கொடுக்கும் வகையிலும், எதிர்வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலை கருத்தில் கொண்டும் ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவு மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை சென்னையில் இன்று காலை 10 மணிக்கு கூட்டினார். இந்தக் கூட்டம் சென்னை வேப்பேரி ரிதர்டன் சாலையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

ஓ.பி.எஸ்-ஐ ஆதரிக்க 3 காரணங்கள்… பண்ருட்டி ராமச்சந்திரன் விளக்கம்
இக்கூட்டத்திற்கு ஓ.பன்னீர்செல்வத்தால் புதிதாக நியமிக்கப்பட்ட அக்கட்சியின் அரசியல் ஆலோசகர் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் பேசிய அவர், ஜெயலலிதா தன் வாழ்நாளில் அடையாளம் காட்டிய ஒரே வாரிசு பன்னீர் செல்வம்தான் என்றும், அவரிடம் துணிவுக்கு பஞ்சமே இல்லை. அவர் மறவர் பரம்பரை என்றும் கூறியுள்ளார்.

“பன்னீர் செல்வத்தை 3 காரணத்தால் ஆதரிக்கிறேன். ஜெயலலிதா தன் வாழ்நாளில் அடையாளம் காட்டிய ஒரே வாரிசு பன்னீர் செல்வம்தான். தான் செல்ல முடியாத இடங்களுக்கு, தேர்தல் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தைக்கு, டெல்லி போன்ற இடங்களுக்கும் பன்னீர் செல்வத்தைத் தான் அனுப்புவார்.
அரசியல்வதிக்கு நம்பகத்தன்மை அவசியம். பன்னீர்செல்வத்தை ஜெயலலிதா நம்பியது போல் மக்கள் நம்பலாம். இயக்கத்தை வழிநடத்த ஒருவருக்கு அடக்கம் பணிவு துணிவு இருக்க வேண்டும். ‘அடக்கம் அமரருள் உய்க்கும்.. ‘ பணியுமாம் என்றும் பெருமை… என்கிறார் வள்ளுவர். பன்னீர்செல்வத்திடம் துணிவுக்கு பஞ்சமே இல்லை.

எம்ஜிஆருக்கு எதிராக திமுகவில் பொதுக்குழு நடந்தபோது, திரைத்துறையில் இருக்கும் நிலையில் எம்ஜிஆர் முகத்தில் திராவகங்களை வீசி விடுவார்கள் என்று நாங்கள் கூறியதால் எம்ஜிஅர் அந்த கூட்டத்திற்கு செல்லவில்லை. என்ன இருந்தாலும் மறவர் பரம்பரை ஓ.பன்னீர் செல்வம். ஏழைகளுக்கான கட்சி இது. அன்றாட கூலி வேலை செய்பவர்கள்தான் தங்களை அ.தி.மு.க என்று சொல்லுவர். தொண்டர்கள் தான் தனது அரசியல் வாரிசு என்றார் எம்ஜிஆர். எனவே தொண்டர்கள் தான் தலைமையை அங்கீகரிப்பார்கள்.”
இவ்வாறு அதிமுக ஓ.பன்னீர் செல்வம் அணி மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பண்ருட்டி ராமச்சந்திரன் பேசியுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil