சென்னையில் இரண்டாவதாக அமைக்க முடிவு செய்யப்பட்டிருக்கும் விமான நிலையம் பரந்தூரில் அமைக்கப்பட திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு பரிந்துரை சேர்ந்த மக்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.
பரந்தூரில் விமான நிலையம் கட்டுவதற்கான விரிவான தொழில்நுட்ப மற்றும் பொருளாதார அறிக்கையை மேற்கொள்ள முடிவுசெய்யப்பட்டுள்ளது. அதற்கான ஆலோசகரை நியமிப்பதற்கான ஏலங்களைப் பெரும் நேரத்தை மாநில அரசு மீண்டும் ஒத்திவைத்துள்ளது.
இதற்கான ஏலம் திங்கள்கிழமை திறக்கப்பட முடிவெடுக்கப்பட்டிருந்தது. ஆனால் கூட்டமைப்புகள் மற்றும் ஏலதாரர்கள் கூடுதல் அவகாசம் கேட்டதை அடுத்து, தேதி மாத இறுதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இரண்டாவது முறையாக தேதி நீட்டிக்கப்பட்டு கூடுதல் அவகாசம் வழங்கப்படுகிறது. ஏலம் ஜனவரி 6 ஆம் தேதி திறக்கப்பட வேண்டும், ஆனால் ஏலதாரர்கள் திட்டத்தை உருவாக்கி விண்ணப்பிக்க போதுமான நேரம் இல்லை என்று கருதியதால் ஒரு மாதம் நீட்டிக்கப்பட்டது.
பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்கான விரிவான தொழில்நுட்ப பொருளாதார அறிக்கை தயார் செய்ய டெண்டர் அவகாசம் இரண்டாவது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஆலோசகர் ஆய்வு செய்த பின்பு, அறிக்கை தயாரித்து, சென்னையின் 70 கிலோமீட்டர் தொலைவில் திட்டத்திற்காக ஏற்கனவே குறிக்கப்பட்ட 4,500 ஏக்கர் நிலத்தில் புதிய விமான நிலையத்தை உருவாக்குபவர்களை அடையாளம் காண்பார்.
இரண்டாவது விமான நிலையத்தை உருவாக்க மத்திய மற்றும் மாநில அரசு ஆர்வமாக உள்ளதாகவும், இரண்டு விமான நிலையங்களும் ஒரே நேரத்தில் பயன்படுத்தப்படும் என்று விமான போக்குவரத்து அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா கூறியிருந்தார்.
புதிய விமான நிலையத்திற்காக சமர்ப்பிக்கப்பட்ட தள அனுமதி விண்ணப்பத்தை அமைச்சகம் பரிசீலித்து வருகிறது.
மீனம்பாக்கத்தில் உள்ள விமான நிலையத்தை விரிவுபடுத்த முடியாத நிலையில், ஆண்டுக்கு 100 மில்லியன் பயணிகளை கையாளும் திறன் கொண்ட புதிய விமான நிலையத்தை 20,000 கோடி செலவில் உருவாக்க மாநில அரசு திட்டமிட்டுள்ளது.
புதிய விமான நிலையத்தில் இரண்டு ஓடுபாதைகள், இரண்டு பயணிகள் முனையங்கள் மற்றும் ஒரு சரக்கு முனையம் அமைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.