சென்னையின் 2-வது விமான நிலையம் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் அமைக்கப்படும் என மத்திய அரசு அறிவித்தது. ரூ.3,224 கோடி மதிப்பீட்டில் விமான நிலையம் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
விமான நிலைய அறிவிப்பு வெளியிடப்பட்ட நாளில் இருந்து பரந்தூரை சுற்றி உள்ள கிராம மக்கள் கடுமையான போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். விளை நிலங்கள், நீர்நிலைகள் அழித்து விமான நிலையம் கட்டப்படும், இதற்கு 12 கிராமங்களில் 5,000 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்படும், தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் எனக் கூறி கிராம மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
எனினும், தமிழக அரசு நில எடுப்பதற்கான அறிவிப்பு வெளியிட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று தமிழக அரசு புதிதாக 61 ஹெக்டேர் நிலம் எடுப்பதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. நில எடுப்பு தொடர்பாக நாளிதழ்களில் விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளது.
இதையடுத்து பரந்தூர் விமான நிலைய பணிக்கு நில எடுப்பு அறிவிப்பு வெளியிட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏகனாபுரம் கிராம மக்கள், அம்பேத்கர் சிலை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது சாலை மறியலில் ஈடுபட்ட கிராம மக்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. ஏகனாபுரம் கிராம மக்களின் தொடர் போராட்டம் நேற்று 765-வது நாளை எட்டி உள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“