சென்னையில் 2-வது விமான நிலையம் பரந்தூரில் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியின் சுற்றுவட்டார கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில், தற்போது இந்த போராட்டம் தற்காலிகமான வாபஸ் பெறப்பட்டள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னையில் 2-வது விமான நிலையம் காஞ்சிபுரம் அருகே உள்ள பரந்தூரில் அமைக்க முடிவு செய்யப்பட்டு அதற்கான நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வந்தது. இதற்காக பரந்தூரின் சுற்றுவட்டார கிராமங்களான ஏகனாபுதூர், வளத்தூர், கொடவூர் , மேலேரி, உள்ளிட்ட 13 கிராமங்களில் இருந்து விமான நிலையம் அமைப்பதற்காக 4,791 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது.
இப்பகுதி மக்கள் விவசாயம், மற்றும் கால்நடைகளை நம்பி பிழைப்பு நடத்தி வரும் நிலையில், இப்பகுதியில் விமானநிலையம் அமைக்கப்பட்டால் அவர்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்பதால் பரந்தூர் பகுதியில் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியில் சுற்றுவட்டாரத்தில் உள்ள 13 கிராமங்களை சேர்ந்த மக்கள் கடந்த 80 நாட்களுக்கு மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வரும் போராட்டக்குவினரை சந்தித்த அமைச்சர் எ.வ.வேலு, தா,மோ.அன்பரசன், தங்கம் தென்னரசு உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தியதில், முடிவு எட்டப்பட்டு தற்போது போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அமைச்சர்கள் தரப்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
பரந்தூர் பசுமைவெளி விமான நிலையம் அமைப்பது தொடர்பான ஏகனாபுரம் மக்கள் தெரிவிக்கையில், ஏகனாபுரம் கிராமத்தில் சுமார் 2400 மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் அனைவருக்குமே விவசாயம் பிரதாக தொழிலாக உள்ளது. எங்கள் கிராமத்தின் வழியாக செல்லும் கம்பக்கால்வாய் விமான நிலையத்திற்காக கையகப்படுத்தக்கூடிய பகுதியில் உள்ளது. எங்கள் கிராமமே சமத்துவ புரமாக உள்ளது. எங்கள் கிராமம் பாதுகாக்கப்பட வேண்டும். அதற்கான வழியை தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.
பரந்தூர் பசுமைவெளி விமான நிலையம் அமைப்பபதில், ஒருவரும் பாதிக்கப்படக்கூடாது என்பதில் முதல்வர் உறுதியாக இருக்கிறார். அதற்காகத்தான் அவர்களின் வாழ்வாதரத்திற்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்கவும், சந்தை மதிப்பில் 3.5 மடங்கு இழப்பீடு கொடுக்கவும் உத்தரவிட்டுள்ளார். கிராம மக்களின் கோரிக்கையை முதல்வரிடம் கொண்டு செல்கிறோம் என்று அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“