/indian-express-tamil/media/media_files/2025/08/27/parandur-project-madras-high-court-farmer-new-case-tvk-advocates-tamil-news-2025-08-27-16-53-41.jpg)
பரந்தூர் விமான நிலையம் அமைக்க ஏகனாபுரம் கிராமத்தில் உள்ள காளி ஏரியை கையகப்படுத்த எதிர்ப்பு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் புதிய வழக்கு தொடரப்பட்டுள்ள நிலையில், மனுதாரர் தரப்பில் தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் வாதாட இருக்கிறார்கள்.
சென்னை சர்வதேச விமான நிலையத்தை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை கடந்த 20 ஆண்டுகளாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதேபோல், சர்வதேச மற்றும் உள்நாட்டு விமானங்களின் வருகையும் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. மேலும், சரக்கு விமானங்களும் அதிகரித்து வருகின்றன. இதனால் சென்னை விமான நிலையத்தில் நெரிசல் ஏற்பட தொடங்கியுள்ளது.
இந்நிலையில், சென்னைக்கு இரண்டாவது விமான நிலையம், அமைக்க வேண்டும் என பல ஆண்டுகளாக அரசு பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. சென்னை புறநகர் பகுதிகளில் பல்வேறு இடங்களில், சென்னையில் புதிய விமான நிலையம் அமைப்பது குறித்து சாத்திய கூறுகள் ஆராயப்பட்டன. இறுதியாக காஞ்சிபுரம் அடுத்த பரந்தூர் பகுதியில், சென்னையின் இரண்டாவது விமான நிலையம் அமைக்கப்படும் என மத்திய மற்றும் மாநில அரசு அறிவித்தன.
இதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து, தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.பரந்தூர் பசுமைவெளி விமான நிலையம் அமைப்பதற்கு திட்ட செலவு 29,150 கோடி ரூபாய் என கணிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் 'டிட்கோ' (தொழில் வளர்ச்சி நிறுவனம்) நிறுவனம் மூலமாக இந்த விமான நிலையம் அமைக்கப்பட உள்ளது. பரந்தூர் விமான நிலையம் பரந்தூர் மற்றும் சுற்றியுள்ள 13 கிராமங்களில் 5,300 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. ஏகனாபுரம், நாகப்பட்டு உள்ளிட்ட கிராமங்கள் மொத்தமாக இந்த திட்டத்துக்காக கையகப்படுத்தப்பட உள்ளன. சுமார் 3,700 ஏக்கர் நீளம் கையகப்படுத்தப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்கான பணிகளில் வருவாய்த்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், பரந்தூர் விமான நிலையம் அமைக்க ஏகனாபுரம் கிராமத்தில் உள்ள காளி ஏரியை கையகப்படுத்த எதிர்ப்பு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் புதிய வழக்கு தொடரப்பட்டுள்ளது. காளி ஏரியின் நீரைப் பயன்படுத்துபவர்கள் சங்கம் சார்பில் அதன் தலைவர் கமலக்கண்ணன் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், "விமான நிலையம் அமைக்க கையகப்படுத்த இருக்கும் 5,247 ஏக்கர் பரப்பில் 26.54 சதவீதம் இடம் நீர்நிலைகள். ஏகனாபுரம் கிராம மக்கள் தங்களது பாசன வசதிக்காக காளி ஏரியை நம்பித்தான் இருக்கிறார்கள்.
வருவாய்த்துறை உத்தரவின் படி, நீர்நிலைகளை விவசாயம் சாராத பயன்பாட்டுக்கு மறுவகைப்படுத்த முடியாது. ஏரியை சேதப்படுத்துவது என்பது விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கக்கூடியது நியமற்ற செயல். ஏகனாபுரம் காளி ஏரியை விவசாயம் சாராத பணிகளுக்காகவோ அல்லது வர்த்தக பணிகளுக்காகவோ பயன்படுத்தக்கூடாது என்று அரசுக்கு உத்தரவிட வேண்டும்." என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு நாளை நீதிபதி முகமது சபிக் முன்பு விசாரணைக்கு வரவுள்ளது. இந்த வழக்கில் மனுதாரர் தரப்பில் தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் வாதாட இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.