/indian-express-tamil/media/media_files/2025/06/29/paranthur-airport-2025-06-29-18-15-36.jpg)
நிலம் கையகப்படுத்த 5 கிராம மக்கள் சம்மதம்: பரந்தூர் விமான நிலைய திட்டத்துக்கு பத்திரப்பதிவு தொடக்கம்
பரந்தூர் விமான நிலையத் திட்டத்திற்காக 17.52 ஏக்கர் நிலம் ரூ.9.22 கோடி மதிப்பில் பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 17.52 ஏக்கர் நிலங்கள் தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனத்திற்காக பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், நிலம் பதிவு செய்த 4 மணி நேரத்திற்குள் வங்கி கணக்கில் பணம் வரவு வைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையின் 2-வது புதிய விமான நிலையம் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் அமைக்கப்படவுள்ளது. இந்த திட்டத்திற்கான நிலம் கையகப்படுத்தும் பணிகள் தொடங்கி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. மொத்தமாக பரந்தூர் மற்றும் அதன் சுற்றியுள்ள 13 கிராமங்களில் இருந்து 5,746 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்படவுள்ளது. இதனை எதிர்த்து பரந்துர் மற்றும் அதனை சுற்றியுள்ள 13 கிராமங்களை சேர்ந்த மக்கள் போராடி வருகின்றனர்.
இதனிடையே பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்கு மத்திய பாதுகாப்பு அமைச்சகம், பொருளாதார விவகாரங்களுக்கான துறை, விமான நிலையங்களுக்கான பொருளாதார ஒழுங்கு முறை ஆணையம், இந்திய வானிலை ஆய்வுத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் முதல் கட்ட ஒப்புதலை அளித்துள்ளன. தொடர்ந்து பரந்தூர் விமான நிலைய திட்டத்தில் கையகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ள நிலங்களுக்கான விலையை நிர்ணயம் செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.
அதன்படி மொத்தம் 3331.25 ஏக்கர் பரப்பிலான நிலங்களுக்கு, ஏக்கருக்கு ரூ.35 லட்சம் முதல் அதிகபட்சமாக ரூ.2.57 கோடி வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்த விலையின்படி கையகப்படுத்தப்பட உள்ள நிலத்தின் அளவைப் பொறுத்து இழப்பீடு நிர்ணயம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் பரந்தூர் விமான நிலைய திட்டத்திற்கான பத்திரப்பதிவு செய்யும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக 17.52 ஏக்கர் நிலம் ரூ.9.22 கோடியில் பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பல்வேறு நிலங்களின் உரிமையாளர்களிடம் இருந்து தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனத்திற்காக பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் நடத்திய பேச்சுவார்த்தையில் பரந்தூர், பொடவூர், நெல்வாய், வளத்தூர், அக்கமாபுரத்தைச் சேர்ந்த கிராமங்களில் நில உரிமையாளர்கள் சம்மதம் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து காஞ்சிபுரம் இணை சார் பதிவாளர் அலுவலகத்தில் நிலம் பத்திரப்பதிவு செய்யப்பட்டு வருகிறது. பத்திரப்பதிவு முடிவடைந்த 4 மணி நேரத்தில் வங்கி கணக்குகள் பணம் வரவு வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக பரந்தூரில் விமான நிலையத் திட்டம் அமைக்க வேண்டும் என்பதில் தமிழக அரசு தீவிரமாக இருப்பதாக பார்க்கப்படுகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.