சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் 25 அரசின் அங்கீகாரம் பெறாத பள்ளிகள் செயல்பட்டு வருவதாகவும், வரும் கல்வியாண்டிற்குள் இந்த பள்ளிகள் அங்கீகாரம் பெறாவிட்டால், அப்பள்ளிகள் மூடப்படும் என்று சென்னை கலெக்டர் எச்சரித்துள்ளார்.
இதுதொடர்பாக சென்னை கலெக்டர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி அனைத்து பள்ளிகளும் பள்ளிக்கல்வித்துறையின் தடையின்மை சான்று மற்றம் அங்கீகாரம் பெற்று செயல்பட வேண்டும். அந்தவகையில் அங்கீகாரம் பெறாத பள்ளிகளிகல் படிக்கும் மாணவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படாததுடன், அந்த பள்ளிகள் வழங்கும் கல்விச்சான்றுகள் தகுதியற்றதாக கருதப்படும். மேலும், அந்த பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள், பொதுத்தேர்வு எழுதவும் முடியாத நிலை ஏற்படும். இந்நிலையில், சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் மட்டும் 25 பள்ளிகள் அங்கீகாரம் பெறாமல் இயங்கி வருவது ஆய்வில் தெரியவந்துள்ளது. அங்கீகாரம் பெறாத இப்பள்ளிகளில், பெற்றோர்கள், தங்கள் பிள்ளைகளை சேர்ப்பதை தவிர்க்க வேண்டும்.
இப்பள்ளிகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ள நிலையில், தொடர்ந்து தடையின்மை சான்றிதழ் மற்றும் அங்கீகாரம் பெறாமல் செயல்பட்டால், அந்த பள்ளிகளின் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது