கோவை மாவட்டம் கிணத்துக்கடவு பகுதியில் உள்ள அரசு மேல்நிலை பள்ளி உள்ளிட்ட தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு பள்ளிகளில் 14 வகையான கல்வி உபகரணங்கள் வழங்கவில்லை எனக் கூறி பெற்றோர்களும் குழந்தைகளும் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு இம்மிடி பாளையத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் பயின்று வருகின்றனர்.

இந்த நிலையில் தமிழகம் முழுவதும் பள்ளிகள் கடந்த ஜூன் மாதமே தொடங்கிவிட்ட நிலையில் புத்தக பை உள்ளிட்ட 14 வகையான கல்வி உபகரணங்கள் கொடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
காலாண்டு தேர்வுகூட முடிந்துவிட்ட இந்த சூழலில் புத்தகங்கள், புத்தகப்பை உள்ளிட்டவை இல்லாமல் மாணவர்கள் கடுமையான சிரமத்திற்கு ஆளாகி வருவதாக இம்மிடிபாளையம் கிராமத்தைச் சேர்ந்த பள்ளிக் குழந்தைகளும் அவர்களது பெற்றோர்களும் தெரிவிக்கின்றனர்.

இந்த நிலையில், 30-க்கும் மேற்பட்ட இம்மிடி பாளையத்தை சேர்ந்த பெற்றோர்களும் குழந்தைகளும் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வந்தனர்.
அப்போது பேசிய சமூக ஆர்வலர் பெரியார் மணி, “இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை பள்ளி கல்வி இயக்ககம் முதலமைச்சரின் தனிப்பிரிவு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கோரிக்கை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை” என குற்றச்சாட்டினார்.
எனவே அரசு உடனடியாக இந்த பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் எனவும், அடுத்த கட்டமாக கிராம மக்களை திரட்டி போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் தெரிவித்தார்.
செய்தி: பி. ரஹ்மான் கோவை மாவட்டம்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“