இந்தியா முழுவதும் ஆண்டுதோறும் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்விற்கு தயாராகும் மாணவர்களின் மன அழுத்தத்தை போக்கி, பயனுள்ள அறிவுரைகளை வழங்கும் வகையில் ‘பரிட்சா பே சர்ச்சா'(தேர்வும் தெளிவும்) என்ற தலைப்பில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடி வருகிறார்.
இதுவரை ஆறாவது நிகழ்வாக நடைபெறும் இந்த நிகழ்ச்சி, டெல்லி டால்கட்டோரா விளையாட்டு அரங்கில் நேற்று நடைபெற்றது.

இதில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி, மாணவ, மாணவிகளின் பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார். மேலும் காணொளி வாயிலாக இந்தியா முழுவதும் ஏராளமான மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
இந்நிகழ்ச்சியில் மொத்தம் 38.80 லட்சம் பேர் பங்கேற்றதில், தமிழக மாணவ, மாணவிகள் சுமார் 10 லட்சம் பேர் பங்கேற்றனர்.
அதில் பங்கேற்ற பிரதமர் மோடி மாணவர்களுக்கு அறிவுரை வழங்கியதாவது, “பிள்ளைகள் அதிக மதிப்பெண் பெற வேண்டும் என்று குடும்பத்தினர் எதிர்பார்ப்பது இயல்பு. கிரிக்கெட் போட்டிதான் இதற்கு சரியான உதாரணம். மைதானத்தில் ‘சிக்ஸர்’ அடிக்க வேண்டும் என்று பார்வையாளர்கள் தொடர்ந்து கோஷமிடுவார்கள். ஆனால், கிரிக்கெட் வீரரின் கவனம் கொஞ்சமும் சிதறாது. அவரது முழு கவனமும் பந்து மீது மட்டுமே இருக்கும். பந்தின் தன்மையைப் பொருத்து மட்டையை சுழற்றுவார்.
இதேபோல, மாணவர்களும் எவ்வித அழுத்தத்துக்கும் ஆளாகாமல், பொதுத்தேர்வுக்கு தயாராக வேண்டும். அதேநேரம், பெற்றோர் தங்கள் எதிர்பார்ப்புகளை பிள்ளைகள் மீது சுமத்த கூடாது.
ஒரு தாய் தனது வீட்டுப் பணிகளை சுறுசுறுப்பாக குறிப்பிட்ட நேரத்தில் செய்து முடித்துவிடுவார். அவர் சோர்வடைவதே கிடையாது. ஓய்வு நேரத்தில்கூட ஏதாவது ஒரு வேலையை செய்துகொண்டு இருப்பார். அதைப்போல, தேர்வுக்கு தயாராகும்போது எந்த பாடத்துக்கு எவ்வளவு நேரம் ஒதுக்க வேண்டும் என்றும், தேர்வு எழுதும்போது எந்த கேள்விக்கு எவ்வளவு நேரம் ஒதுக்க வேண்டும் என்றும் நாம் முன்கூட்டியே நிர்ணயித்துக் கொள்ள வேண்டும்.
தேர்வு அறையில் கண்காணிப்பாளரை ஏமாற்றி முறைகேடுகளில் ஈடுபடுவது மிக மோசமான அணுகுமுறை. சில டியூஷன் மையங்கள் தங்கள் மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற வேண்டும் என்பதற்காக தவறிழைக்க தூண்டுகின்றனர். குறுக்கு வழியில் மாணவர்கள் ஒருபோதும் செல்லக்கூடாது. குறுக்கு வழியில் செல்வோர் சில தேர்வுகளில் வெற்றிபெற்றாலும் வாழ்க்கையில் தோல்வி அடைவார்கள்.
நமது தமிழ்மொழிதான் உலகின் மிகவும் பழமையான மொழி. இதில் நமக்கு கர்வம் இருக்க வேண்டும். இது நம் நாட்டில் இருக்கும் பெரிய சொத்து, கவுரவம் ஆகும்’’ என்று கூறினார்.