Parithi Ilamvazhuthi Death: பரிதி இளம்வழுதி திடீரென மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 58. முன்னாள் அமைச்சரான அவரது உடலுக்கு பல்வேறு கட்சித் தலைவர்களும் அஞ்சலி செலுத்தினர். இரங்கல் அறிக்கையும் வெளியிட்டனர். கருணாநிதியால் அபிமன்யூ என பாராட்டப்பட்டவர் பரிதி இளம்வழுதி என்பது குறிப்பிடத்தக்கது.
பரிதி இளம்வழுதி, சென்னையில் திமுக தலைவர்களில் முக்கியமான ஒருவராக திகழ்ந்தார். எழும்பூர் தொகுதியில் இருந்து 6 முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்வு பெற்ற பெருமைக்குரியவர்!
2001 சட்டமன்றத் தேர்தலில் திமுக சார்பில் கருணாநிதியும், பரிதி இளம்வழுதியும் மட்டுமே வெற்றி பெற்றனர். கருணாநிதி சட்டமன்றம் செல்லாத நிலையில், தனி ஆளாக ‘பேன்ட்’ அணிந்தபடி சட்டமன்றம் சென்று, அடுத்த 5 ஆண்டுகளும் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசுக்கு இயன்றவரை எல்லாக் குடைச்சல்களையும் கொடுத்தார்.
‘வேஷ்டி அணிந்து சென்றால், சபையில் உருவி விடுவார்கள். அதனால்தான் பேன்ட் அணிந்து செல்கிறேன்’ என மேடைகளில் விளக்கமும் கொடுத்தார். அப்போதுதான் இவரது செயல்பாட்டை புராண கதாபாத்திரமான அபிமன்யூவின் வீரத்துக்கு ஒப்பிட்டு கருணாநிதி பாராட்டினார்.
ஆனால் 2011 தேர்தலுக்கு பிறகு உள்கட்சிப் பிரச்னையில் பரிதி மனம் உடைந்தார். எந்த ஜெயலலிதாவை எதிர்த்து தீவிரமாக பேசினாரோ, அதே ஜெயலலிதா தலைமையை ஏற்று அதிமுக.வில் இணைந்தார். இவரை அதிமுக.வில் செயற்குழு உறுப்பினர், செய்தி தொடர்பாளர் உள்ளிட்ட பொறுப்புகளில் ஜெயலலிதா அமர்த்தினார்.
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோர் தலைமையை ஏற்று அமமுக.வில் செயல்பட்டு வந்தார். இவரது மகன் பரிதி இளம்சுருதி தொடர்ந்து திமுக இளைஞர் அணியில் இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
நீண்ட காலமாகவே நீரிழிவு உள்ளிட்ட பிரச்னைகளால் அவதிப்பட்ட வந்த பரிதி இளம்வழுதி இன்று (அக்டோபர் 13) காலை அடையாறு மலர் மருத்துவமனையில் மாரடைப்பால் மரணம் அடைந்தார். அசாத்திய அரசியல் உழைப்பாளர் மற்றும் பேச்சாளரான பரிதி, 58 வயதில் மரணம் அடைந்திருப்பது பலரையும் சோகத்தில் ஆழ்த்தியது.
ஒடுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்தவராக அவரது அரசியல் வீச்சு, தமிழகம் முழுக்க அவருக்கு அபிமானிகளை பெற்றுக் கொடுத்திருக்கிறது. அவரது உடலுக்கு கட்சித் தலைவர்கள் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.
இரங்கல் செய்தி
தமிழக முன்னாள் சட்டப்பேரவை துணைத்தலைவரும், கழக அமைப்பு செயலாளருமான திரு.பரிதி இளம்வழுதி அவர்கள் உடல் நலக்குறைவால் இன்று காலமானார் என்ற செய்தி கேட்டு
மிகுந்த வேதனை அடைந்தேன். pic.twitter.com/gYoz6OYpiy
— TTV Dhinakaran (@TTVDhinakaran) 13 October 2018
சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், அமமுக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் உள்பட பலர் இறுதி அஞ்சலி செலுத்தினர். வைகோ, திருமாவளவன் உள்பட பலர் இரங்கல் அறிக்கை விட்டனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.