நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று (சனிக்கிழமை) முடிவடைகிறது. நாடாளுமன்ற தேர்தலுக்கு முந்தைய கடைசி கூட்டத்தொடர் இது என்பதால், பட்ஜெட் கூட்டத்தொடரில் காரசாரமான விவாதம் நடைபெற்று வருகிறது. பா.ஜ.க தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட வெள்ளை அறிக்கை தொடர்பாக எதிர்க் கட்சிகள் கடுமையாக சாடி வருகின்றனர்.
மாநில உரிமைக்காக தி.மு.க எம்.பி-க்கள் மக்களவையில் குரல் எழுப்பி வலியுறுத்தி வருகிறார்கள். மத்திய - மாநில அரசுகளுக்கு இடையேயான நிதி பங்கீடு, தமிழகத்துக்கான வெள்ள நிவாரணம் உள்ளிட்டவை குறித்து பேசிய தி.மு.க எம்.பி-க்கள், நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம் செய்தனர்.
இந்நிலையில், பட்ஜெட் கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்று ராமர் கோயில் தொடர்பான 'நன்றி தெரிவிக்கும் தீர்மானம்' தாக்கல் செய்யப்பட்டது. அப்போது, மக்களவையில் இருந்து தி.மு.க எம்.பிக்கள் வெளிநடப்பு செய்தனர். தமிழக மீனவர்கள் நலனை காக்க வில்லை எனக்கூறிய தி.மு.க. எம்.பி.க்கள் மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்து வெளிநடப்பு செய்தனர்.
மேலும், மக்களவையில் 'காப்பாற்று, காப்பாற்று' என்றபடி தி.மு.க. எம்.பி.க்கள் தமிழில் முழக்கமிட்டனர். இதனால் அவையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“