நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், பொள்ளாச்சி மக்களவைத் தொகுதி பா.ஜ.க வேட்பாளர் வசந்தராஜன் மடத்துக்குளம் சுற்றுவட்டார பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
முன்னதாக மடத்துக்குளம் வந்த வேட்பாளர் வசந்தராஜனுக்கு அக்கட்சி தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதையடுத்து அப்பகுதியில் உள்ள விவசாயத் தோட்டங்களுக்கு சென்ற வசந்தராஜன் விவசாயிகளிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இதனை தொடர்ந்து அங்கு நடைபெற்ற கரும்பு விவசாயிகளுடனான கலந்துரையாடலில் கலந்து கொண்ட வசந்தராஜன் அவர்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.
அப்போது விவசாயிகள் மத்திய பேசிய வசந்தராஜன், பொள்ளாச்சி தொகுதி விவசாய தொழில் பிரதானமான தொகுதியாக உள்ளது. இங்குள்ள தென்னை விவசாயிகளும் கடுமையான பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர். தென்னையில் உற்பத்தியாகும் பொருட்களை மதிப்பு கூட்டு பொருட்களாக மாற்றி விற்பனை செய்யும் போது மட்டுமே விவசாயிகளின் வாழ்வாதாரம் உயரும். அதேபோல கள் இறக்க அனுமதி கேட்டுள்ளோம்.
மேலும் பாரத் ஆட்டோ போல தேங்காய் எண்ணெய்களை ரேஷன் கடையில் பாரத் ஆயில் என விற்பனை செய்ய நடவடிக்கை எடுத்தால் அவர்களது வாழ்வாதாரம் மேம்படும். மடத்துக்குளம் கரும்பு விவசாயிகள் அதிகம் உள்ள பகுதி தற்போது கரும்பு விவசாயிகளுக்கு சாகுபடிக்கான உரிய விலை கிடைப்பதில்லை. ஒரு டன் கரும்புக்கு கிடைக்கும் விலையை விட எரிக்க பயன்படுத்தும் சீமை கருவேல மரத்திற்கான வேலை அதிகமாக உள்ளது எனக் கூறியிருக்கிறார்கள்.
எனவே கொள்முதல் விலையை அதிகரிக்கவும் ஏற்கனவே செயல்பட்டு வந்த சர்க்கரை ஆலை செயல்படுத்தவும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். தேசிய கட்சியை சேர்ந்த ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் வரும்போது விவசாயிகளின் கோரிக்கைகள் முழுமையாக தீர்ப்பு செய்யப்படும் என தெரிவித்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“