Advertisment

மக்களவை தேர்தல் 2024: நெசவு நகரத்தை தக்கவைக்குமா காங்கிரஸ்? கரூர் தொகுதி நிலவரம் இங்கே

மக்களவை தேர்தல் 2024; தொகுதியை தக்கவைக்குமா காங்கிரஸ்? ஜோதிமணி எம்.பி.,யாக இருந்து வரும் கரூர் நாடாளுமன்ற தொகுதியின் கடந்த கால வரலாறு இங்கே

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
mp jothimani, Jothimani quits TV debate over Karu Nagarajan's derogatory speech

மக்களவை தேர்தல் 2024; தொகுதியை தக்கவைக்குமா காங்கிரஸ்? ஜோதிமணி எம்.பி.,யாக இருந்து வரும் கரூர் நாடாளுமன்ற தொகுதியின் கடந்த கால வரலாறு இங்கே

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தமிழகத்தில் உள்ள நாடாளுமன்ற தொகுதிகளின் கடந்த கால நிலவரம் குறித்து இந்தத் தொடர்க் கட்டுரையில் பார்ப்போம்.

Advertisment

தமிழகத்தின் நெசவு நகரமான கரூர் தொகுதியில் அ.தி.மு.க மற்றும் காங்கிரஸ் கட்சிகளே ஆதிக்கம் செலுத்தியுள்ளன. கடந்த சில தேர்தல்களில் அ.தி.மு.க.,வின் கோட்டையாக இருந்த நிலையில், கடைசியாக நடந்த தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்ற, கரூர் மக்களவைத் தொகுதியின் தேர்தல் வரலாற்றை இப்போதுத் தெரிந்துக் கொள்வோம்.

தமிழகத்தின் 39 மக்களவை தொகுதிகளில் கரூர் 23 ஆவது தொகுதியாகும். கரூர் தொகுதியில் 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. 2008 ஆம் ஆண்டு தொகுதி மறுசீரமைப்புக்குப் பின்னர் கரூர் தொகுதியில் இடம் பெற்றிருந்த மருங்காபுரி, குளித்தலை, தொட்டியம் ஆகிய தொகுதிகள் நீக்கப்பட்டு, மணப்பாறை மற்றும் விராலிமலை தொகுதிகள் சேர்க்கப்பட்டுள்ளன. தற்போது கரூர் மக்களவைத் தொகுதியில் வேடச்சந்தூர், அரவக்குறிச்சி, கரூர், கிருஷ்ணராயபுரம், மணப்பாறை, விராலிமலை ஆகிய 6 சட்டமன்றத் தொகுதிகள் இடம்பெற்றுள்ளன. இதில் வேடச்சந்தூர் தொகுதி திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தது. மணப்பாறை தொகுதி திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்தது. விராலிமலை புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்தது.

சுதந்திர இந்தியாவின் இரண்டாவது தேர்தல் முதல் மக்களவை தொகுதியாக இருந்து வரும் கரூர் தொகுதியில் காங்கிரஸ் 7 முறையும், அ.தி.மு.க 6 முறையும் வெற்றி பெற்றுள்ளன. 1957ல் நடந்த முதல் தேர்தலில், காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட பெரியசாமி கவுண்டர் வெற்றி பெற்று எம்.பி ஆனார். 1962 தேர்தலிலும் காங்கிரஸ் வெற்றி பெற்றது. ராமநாதன் செட்டியார் எம்.பி ஆனார்.

1967 தேர்தலில் சுதந்திராக் கட்சி வெற்றி பெற்றது. 1971 தேர்தலில் தொகுதி மீண்டும் காங்கிரஸ் வசமானது. 1971, 1977, 1980, 1984 ஆகிய 4 தேர்தல்களிலும் காங்கிரஸே வென்றது. முதல் இரண்டு தேர்தல்களில் கோபாலும், அடுத்த 2 தேர்தல்களில் முருகையாவும் வெற்றி பெற்றனர்.

1989 தேர்தலில் தொகுதியை அ.தி.மு.க முதல்முறையாக கைப்பற்றியது. அ.தி.மு.க சார்பில் தம்பிதுரை வெற்றி பெற்றார். அடுத்த 1991ல் நடந்த தேர்தலிலும் அ.தி.மு.க வெற்றி பெற்றது. இந்தமுறை முருகேசன் எம்.பி ஆனார்.

1996 தேர்தலில் தமிழ் மாநில காங்கிரசு கரூரில் வென்றது. 1998 தேர்தலில் தொகுதி மீண்டும் அ.தி.மு.க வசம் வந்தது. இந்த தேர்தலில் தம்பிதுரை எம்.பி ஆனார். 1999 நடந்த தேர்தலிலும் அ.தி.மு.க வென்றது. இந்த முறை சின்னசாமி எம்.பி ஆனார்.

2004 தேர்தலில் தான் முதல்முறையாக தொகுதியை தி.மு.க கைப்பற்றியது. தி.மு.க மூத்த தலைவர் கே.சி பழனிச்சாமி எம்.பி ஆனார்.

2009 தேர்தலில் அ.தி.மு.க தொகுதியை மீண்டும் கைப்பற்றியது. தம்பிதுரை மீண்டும் வெற்றி பெற்றார். 2014 தேர்தலிலும் அ.தி.மு.க சார்பில் தம்பிதுரை வெற்றி பெற்றார்.

2019 தேர்தல்

2019 தேர்தலில் தொகுதி மீண்டும் காங்கிரஸ் வசம் வந்தது. இந்தத் தேர்தலில் தி.மு.க கூட்டணி சார்பில் காங்கிரஸின் ஜோதிமணி களமிறங்கினார். அ.தி.மு.க சார்பில் மீண்டும் தம்பிதுரை போட்டியிட்டார். தமிழகம் முழுவதும் தி.மு.க கூட்டணிக்கு சாதகமாக இருந்தநிலையில், சுமார் 4.20 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தம்பிதுரை ஜோதிமணி தோற்கடித்தார். இருவருக்கும் வாக்கு வித்தியாசம் 38%. ஜோதிமணி 6,95,697 வாக்குகளையும், தம்பிதுரை 2,75,151 வாக்குகளையும் பெற்றனர்.

நாம் தமிழர் கட்சி 38,543 வாக்குகளையும், அ.ம.மு.க 31,139 வாக்குகளையும் மக்கள் நீதி மய்யம் 15,967 வாக்குகளையும் பெற்றன.

தொகுதியை தக்கவைக்குமா காங்கிரஸ்?

தி.மு.க கூட்டணியில் தொகுதி மீண்டும் காங்கிரஸூக்கு ஒதுக்கப்பட வாய்ப்புள்ளது. அப்படி ஒதுக்கப்படும் நிலையில் மீண்டும் ஜோதிமணி போட்டியிட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. செந்தில் பாலாஜி தேர்தல் களத்தில் இல்லாதது தி.மு.க கூட்டணிக்கு சற்று சுணக்கத்தை ஏற்படுத்தலாம். அ.தி.மு.க சார்பில் தம்பிதுரை களமிறங்க வாய்ப்புள்ளது.

கரூர் தொகுதி தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலையின் சொந்த தொகுதி. கடந்த சில மாதங்களாக அண்ணாமலை இந்தத் தொகுதியில் களமிறங்குவார் என்று கூறப்பட்ட நிலையில், அவர் இதுவரை தேர்தலில் போட்டியிடுவதைப் பற்றி எதுவும் கூறவில்லை. இருப்பினும் பா.ஜ.க அதிக முக்கியத்துவம் அளிக்கும் தொகுதிகளில் கரூர் தொகுதியும் ஒன்று.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Lok Sabha Election Tamil Nadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment