மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தமிழகத்தில் உள்ள நாடாளுமன்ற தொகுதிகளின் கடந்த கால நிலவரம் குறித்து இந்தத் தொடர்க் கட்டுரையில் பார்ப்போம்.
தமிழகத்தின் மத்திய பகுதியில் அமைந்துள்ள பெரம்பலூர் தொகுதியில் தி.மு.க மற்றும் அ.தி.மு.க கட்சிகளே ஆதிக்கம் செலுத்தியுள்ளன. 3 மாவட்டங்களின் கலவையாக இருக்கும் பெரம்பலூர் மக்களவைத் தொகுதியின் தேர்தல் வரலாற்றை இப்போதுத் தெரிந்துக் கொள்வோம்.
தமிழகத்தின் 39 மக்களவை தொகுதிகளில் பெரம்பலூர் 25 ஆவது தொகுதியாகும். பெரம்பலூர் தொகுதியில் 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. 2008 ஆம் ஆண்டு தொகுதி மறுசீரமைப்புக்குப் பின்னர் பெரம்பலூர் தொகுதியில் இடம் பெற்றிருந்த ஜெயங்கொண்டம் மற்றும் அரியலூர் தொகுதிகள் சிதம்பரம் தொகுதியுடன் இணைக்கப்பட்டன. அதேநேரம் திருச்சி தொகுதியிலிருந்த லால்குடி, முசிறி மற்றும் கரூர் தொகுதியிலிருந்த குளித்தலை ஆகிய தொகுதிகள் பெரம்பலூருடன் சேர்க்கப்பட்டுள்ளன. புதிதாக உருவாக்கப்பட்ட மண்ணச்சநல்லூர் தொகுதியும் பெரம்பலூருடன் சேர்க்கப்பட்டுள்ளது.
தற்போது பெரம்பலூர் மக்களவைத் தொகுதியில் குளித்தலை, லால்குடி, முசிறி, மண்ணச்சநல்லூர், துறையூர் மற்றும் பெரம்பலூர் ஆகிய 6 சட்டமன்றத் தொகுதிகள் இடம்பெற்றுள்ளன. இதில் 4 சட்டமன்ற தொகுதிகள் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவை.
சுதந்திர இந்தியாவின் முதல் தேர்தல் முதல் பெரம்பலூர் தொகுதி மக்களவையில் இடம்பெற்று வருகிறது. 1951ல் நடந்த தேர்தலில் தமிழ்நாடு உழைப்பாளர் கட்சியின் பூவராகசாமி படையாச்சி வெற்றி பெற்றார். 1957ல் நடந்த தேர்தலில் காங்கிரஸ் சார்பில் பழனியாண்டி எம்.பி ஆனார்.
1962ல் தேர்தலில் பெரம்பலூர் தொகுதியை தி.மு.க முதல் முறையாக கைப்பற்றியது. பின்னர் தொடர்ந்து ஹாட்ரிக் அடித்தது. 1962 தேர்தலில் செழியன் தி.மு.க சார்பில் வெற்றி பெற்றார். அடுத்து நடந்த 1967, 1971 தேர்தல்களில் தி.மு.க சார்பில் துரைராசு எம்.பி.ஆனார்.
1977 தேர்தலில் அ.தி.மு.க முதல்முறையாக வென்றது. அ.தி.மு.க வேட்பாளர் அசோக் ராஜ் எம்.பி ஆனார். 1980 தேர்தலில் காங்கிரஸ் மீண்டும் வெற்றி பெற்றது. காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட மணி வெற்றி பெற்றார்.
அடுத்து 1984 தேர்தலில் தொகுதியை மீண்டும் கைப்பற்றிய அ.தி.மு.க, அடுத்த இரண்டு தேர்தல்களிலும் வெற்றி பெற்று ஹாட்ரிக் அடித்தது. 1984 மற்றும் 1989 தேர்தல்களில் அ.தி.மு.க வேட்பாளர் தங்கராசு வெற்றி பெற்றார். 1991 தேர்தலில் அ.தி.மு.க சார்பில் மீண்டும் அசோக்ராஜ் எம்.பி ஆனார்.
1996 தேர்தலில் தி.மு.க தொகுதியை மீண்டும் வென்றது. தி.மு.க சார்பில் ஆ.ராசா எம்.பி.,யாக தேர்வாகி, மத்திய அமைச்சரானார். 1998 தேர்தலில் தி.மு.க சார்பில் ஆ.ராசா போட்டியிட்டார். ஆனால் அ.தி.மு.க வெற்றி பெற்று, ராஜரெத்தினம் எம்.பி ஆனார்.
1999 தேர்தலில் தி.மு.க சார்பில் போட்டியிட்ட ஆ.ராசா மீண்டும் எம்.பி ஆனார். 2004 தேர்தலிலும் ஆ.ராசா வெற்றி பெற்றார். 2009 தேர்தலில் தனித் தொகுதியாக இருந்து பொதுத் தொகுதியாக மாறிய நிலையில், தி.மு.க சார்பில் போட்டியிட்ட நடிகர் நெப்போலியன் எம்.பி ஆனார். 2014 தேர்தலில் மீண்டும் அ.தி.மு.க வென்றது. மருதராஜா எம்.பி ஆனார்.
2019 தேர்தல்
2019 தேர்தலில் தொகுதி மீண்டும் தி.மு.க கூட்டணி வசம் வந்தது. இந்தத் தேர்தலில் பெரம்பலூர் தொகுதி தி.மு.க கூட்டணியில் இந்திய ஜனநாயக கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. ஐ.ஜே.கே தலைவர் பாரிவேந்தர் வேட்பாளராக போட்டியிட்டார். அ.தி.மு.க.,வில் முன்னாள் எம்.எல்.ஏ சிவபதி களமிறங்கினார். பாரிவேந்தர் 4,03,518 வாக்குகள் வித்தியாசத்தில் சிவபதியை தோற்கடித்தார். இருவருக்கும் வாக்கு வித்தியாசம் 37%. பாரிவேந்தர் 6,83,697 வாக்குகளையும், சிவபதி 2,80,179 வாக்குகளையும் பெற்றனர். நாம் தமிழர் கட்சி 53,545 வாக்குகளை பெற்றது.
தொகுதியை தக்கவைக்குமா தி.மு.க?
கடந்த தேர்தலில் தி.மு.க கூட்டணியில் இடம்பெற்றிருந்த பாரிவேந்தரின் ஐ.ஜே.கே, இந்தத் தேர்தலில் பா.ஜ.க கூட்டணியில் களமிறங்கியுள்ளது. இதனால் பெரம்பலூரில் தி.மு.க.,வே களமிறங்கும் எனக் கூறப்படுகிறது. பா.ஜ.க கூட்டணி மீண்டும் தொகுதி ஐ.ஜே.கே கட்சிக்கு ஒதுக்கப்படலாம். மீண்டும் பாரிவேந்தர் போட்டியிடுவார் என கூறப்படுகிறது. அ.தி.மு.க.,வில் மீண்டும் அ.தி.மு.க களமிறங்க வாய்ப்புள்ள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.